அடிகளின் வேதனை! தமிழகத்துக் காங்கிரஸ் பெருந்தலைவர்களுக்கு இருந்த ஆங்கில மோகம் கண்டு அடிகள் வருந்தினார். வாய்ப்பு நேரும் போதெல்லாம் அதனைக் கண்டிக்கவும் துணிந்தார். 1915ல் அடிகள் மாயூரத்திற்கு வருகை தந்தபோது, நகர காங்கிரஸ் வரவேற்பிதழ் ஆங்கில மொழியில் தயாரிக்கப்பட்டிருந்தது. அது கண்டுவருந்தினார். "வரவேற்பிதழ் ஆங்கில மொழியில் பொறிக்கப்பட்டிருத்தல் காண்கின்றேன். இந்திய தேசியக் காங்கிரசில் சுதேசித்தீர்மானம் நிறைவேறியிருக்கிறது. நீங்கள் சுதேசிகள் என்று கருதிக் கொண்டு இவ்வறிக்கையை ஆங்கில மொழியில் அச்சுறுத்தினால் நான் சுதேசியல்லேன். "நீங்கள் உங்கள் நாட்டுமொழிகளைக் கொன்று, அவைகளின் சமாதி மீது ஆங்கிலத்தை நிலவச் செய்வீர்களாயின், நீங்கள் நன்னெறியில் சுதேசியத்தை வளர்ப்பபவர்களாக மாட்டீர்கள் என்று சொல்லுவேன். எனக்குத்தமிழ் மொழி தெரியாதென்று நீங்கள் உணர்ந்தால், அம்மொழியை எனக்குக் கற்பிக்கவும், அதைப் பயிலுமாறு என்னைக் கேட்கவும் வேண்டும். அவ்வினிய மொழியில் வரவேற்பிதழ் அளித்து, அதை மொழி பெயர்த்து எனக்கு உணர்த்தியிருப்பீர்களாயின், உங்கள் கடனை ஒருவாறு ஆற்றினவர்களாவீர்கள்."1 12-10-27ல் அடிகள் மீண்டும் தமிழகம் வருகை தந்த போது, தூத்துக்குடி நகரில் பேசுகையில் கூறியதாவது: "ஆங்கிலம் பயில்வதற்கு முன்னர்த் தமிழ்மொழி பயிலல் வேண்டும் என்று யான் பன்முறை பகர்ந்திருக்கிறேன். 1915ஆம் ஆண்டிலேயே ஆங்கிலத்தினும் தமிழ் மொழியைச் சிறப்பாகக் கொள்ளுமாறு தமிழ்மக்களை வேண்டிக்கொண்டேன். "இவற்றைப் பத்தாண்டுகட்கு முன்னர் இந்தியா முழுவதுஞ் சுற்றிச் சுற்றி அன்னிய மொழி வாயிலாகப் பிள்ளைகளுக்குக் கல்வி புகட்டலாகாது என்று கிளர்ச்சி செய்தேன். தாய்மொழியில் பேசுமாறும், தாய்மொழி நூல்களைப் பயிலுமாறும் மக்களுக்கு விண்ணப்பம் செய்து கொண்டேன். 1. மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், பக்.126 |