தேம்ஸ்நதிக் கரையில் கொக்கு - அங்கு
தின்ன வழியில்லாத கொக்கு - மது
மாமிச வெறிபிடித்த கொக்கு - நம்
மக்களை ஏமாற்ற வந்த கொக்கு இந்தப் பாடலையேயன்றி, வேறு பல தேசியப் பாடல்களையும் அவர்
பாடுவதுண்டு. "வள்ளித் திருமண" நாடகத்திலே அவர் முருகன் வேடத்தில்
தோன்றும்போதும் "கொக்கு பாட்டுப் பாடு" என்று ரசிகப் பெருமக்கள் குரல்
கொடுப்பார்கள். பாடத் தொடங்கியதுமே ஆனந்தத்தால் கைதட்டி ஆரவாரம்
செய்வார்கள். ஒரு முறை பாடி முடித்தால், "ஒன்ஸ் மோர்" என்று கூவி,
திரும்பவும் பாடுமாறு வற்புறுத்துவார்கள். அவரும் பாடுவார்.
நாடக நடிகர்களிலேயே தலைசிறந்த தேசியவாதியாகத் திகழ்ந்த
விசுவநாத தாஸ், திருமங்கலம் தாலுகா காங்கிரஸ் கமிட்டியில் அங்கம்
வகித்தார். மதுரை ஜில்லா போர்டிலும் காங்கிரஸ் சார்பில் அங்கம் வகித்தார்.
இவர் வேடந்தரிப்பதற்கான உடைகளையும் கதரிலேயே தயாரித்துப்
பயன்படுத்தினார். தேசியப் பாசறையிலே மிகுந்தசெல்வாக்குப் பெற்றிருந்த
நிலையில், 31-12-1940ல் எஸ்.எஸ்.விசுவநாததாஸ் திடீரென்று மரணமடைந்தார்.
சென்னை ராயல் தியேட்டரில் (இப்போது அந்தக் கொட்டகை இல்லை)
வள்ளித் திருமணம் நாடகத்திலே கழுகாசல சீனில் தோன்றிப் பாடிக்
கொண்டிருந்தபோது தீடீரென்று மாரடைத்து மேடையிலேயே
மரணமடைந்தார்.அப்போது அவர் தாங்கியிருந்த முருகன் வேடத்துடனேயே
மயில் மீது அமர்ந்த கோலத்திலேயே அவரது பிரேத ஊர்வலம்
நடத்தப்பட்டது.
தேசபக்தி
தேசபக்தர் சாமிநாத சர்மா, 'பாணபுரத்து வீரன்' என்னும் சரித்திரந்
தழுவிய நாடகம் ஒன்றைத் தமிழில் தந்துள்ளார். அதனை, 'தேசபக்தி' என்ற
மாற்றுப் பெயரால் நாடக உலகில் புகழுடன் விளங்கும் டி.கே.எஸ். சகோதரர்
நாடகக் குழுவினர் நடித்துள்ளனர். பல ஊர்களில் அரசினரின் தடைக்கும்
உள்ளானது இந்நாடகம். இந்நாடகக் கதைக்கும் இருபதாம் நூற்றாண்டின் முற்பாதியில் நாட்டில் நடைபெற்ற விடுதலைப்போருக்கும் நேரடித் தொடர்பு
எதுவுமில்லை. ஆயினும், நாட்டில் ஏற்பட்டிருந்த தேசிய எழுச்சியைப்
பிரதிபலிக்கும் வகையில் இந்நாடகத்தின் உரையாடல் எழுதப்