வெளியிட்டார். இந்த நூல்கள் தமிழ்மட்டுமே அறிந்த சாதாரண மக்களுக்கு தேசிய உணர்ச்சியை ஊட்டின. சிறைசென்ற தேசிய வாதியான ஐயர் தமிழ் மொழியை வளர்க்கவும், சாதாரண மக்களுக்கு ஞானமூட்டவும் அந்நாளில் ஆற்றியுள்ள அருநதொண்டு போற்றற்குரியதாகும். வ.உ.சிதம்பரனார், தம்முடைய நூல்களைத் தாமே வெளியிட்டார். அதற்காகத் தேவைப்படும் பொருளை, தமிழ்ப் பற்றுடைய நண்பர்களிடமிருந்து திரட்டினார். ஆனால், அவரும் தமிழ் நூல்களை எழுதியதனாலோ, பிறரிடம் பொருளுதவி பெற்றுத் தாமே வெளியிட்டதனாலோ, வருவாய் அடையவில்லை. தமிழ் மொழிக்குத் தொண்டு புரிந்த அளவிலே மனநிறைவு பெற்றார். வல்லமை மிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடியதால் அடைந்த இன்னல்களோடு, தமிழ் மொழிக்குத் தொண்டு புரிவதால் நேரும் இடுக்கண்களையும் சகித்துக் கொண்டனர், அந்நாளைய தேசியவாதிகள். ஆம்; அவர்கள், நாட்டுப்பற்று வேறு, மொழிப்பற்று வேறு என்று கருதாதவர்களாதலால், இரண்டு பணிகளிலும் ஏககாலத்தில் ஈடுபட்டு, இன்னலுற்றனர். பிரசுராலயங்கள் தமிழ் மக்களிடையே தமிழ் நூல்களைப் படிக்கும் ஆர்வம் வளரத் தொடங்கி பின்னர், தமிழ் நூல்களை வெளியிடும் நிறுவனங்கள் - தேச விடுதலைப்போர் நடந்துகொண்டிருந்த காலத்திலேயே - தேசியவாதிகளால் தோற்றுவிக்கப்பட்டன. அவற்றுள் சக்தி காரியாலயம், நவயுகப் பிரசுராலயம், புதுமைப்பதிப்பகம், பிரபஞ்ச ஜோதிப் பிரசுராலயம், தமிழ்ப்பண்ணை, அல்லயன்ஸ் பதிப்பகம், கலைமகள் காரியாலயம் ஆகியவை முக்கியமானவை எனலாம். அந்நாளைய தேசபக்தர்கள் தமிழ் நூல்களை வெளியிடுவதிலேயும் தங்கள் தாய் மொழியின் தனித்தன்மை கெடாமல் காப்பதில் கண்ணுங் கருத்துமாக இருந்தனர். ஆம், நூல் வெளியிடுவதை இலாபந் தரும் தொழிலாக மட்டுமல்லாமல், தாய்மொழியை வளர்க்கும் தொண்டாகவும் அவர்கள் கருதினர். வரலாற்று நூலொன்றுக்குத் தமது 'பாலபாரதி' இதழில் மதிப்புரை எழுதிய வ.வே.சு.ஐயர், அந்நூலில் தாம் கண்ட - தமிழ் வளர்ச்சிக்குக் |