தேச பாஷையே ப்ரதானம் என்பது தேசியக் கல்வியின் ஆதாரக்
கொள்கை; இதை மறந்துவிடக்கூடாது. தேச பாஷையை விருத்தி செய்யும்
நோக்கத்துடன் தொடங்கப்படுகிற இந்த முயற்சிக்கு நாம் தமிழ் நாட்டிலிருந்து
பரிபூர்ண ஸஹாயத்தை எதிர்பார்க்க வேண்டுமானால், இந்த முயற்சிக்குத்
தமிழ் பாஷையே முதற் கருவியாக ஏற்படுத்தப்படும் என்பதைத் தம்பட்டம்
அறைவிக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் ஏற்படும் தேசியப் பாடசாலைகளில் உபாத்தியாயராக
வருவோர் திருக்குறள், நாலடியார் முதலிய நூல்களிலாவது தகுந்த பழக்கம்
உடையவர்களாக இருக்க வேண்டும்.
தேச பாஷையின் மூலமாகவே சரித்திரப் படிப்பு மட்டுமேயன்றி
மற்றெல்லாப் பாடங்களும் கற்பிக்கப்பட வேண்டுமென்பது சொல்லாமலே
விளங்கும்.
பௌதிக சாஸ்திரங்கள் கற்றுக் கொடுப்பதில், மிகவும் தெளிவான
எளிய தமிழ் நடையில் பிள்ளைக்கு மிகவும் ஸு லபமாக விளங்கும்படி
சொல்லிக் கொடுக்க வேண்டும். இயன்ற இடத்திலெல்லாம் பதார்த்தங்களுக்கு
தமிழ்ப் பெயர்களையே உபயோகப்படுத்த வேண்டும்.
தமிழ்ச் சொற்கள் அகப்படாவிட்டால் ஸம்ஸ்கிருத பதங்களை
வழங்கலாம்.
இந்த இரண்டு பாஷைகளிலும் பெயர்கள் அகப்படாத இடத்தில்
இங்கிலீஷ் பதங்களையே உபயோகப்படுத்தலாம். ஆனால், குணங்கள்,
செயல்கள், நிலைமைகள் இவற்றுக்கு இங்கிலீஷ் பதங்களை ஒருபோதும்
வழங்கக் கூடாது. பதார்த்தங்களின் பெயர்களை மாத்திரமே இங்கிலீஷில்
சொல்லலாம், வேறு வகையில் உணர்த்த இயலாவிடின்.
கல்வி கற்பதில் பிள்ளைகளிடம் அரையணாக்கூடச் சம்பளம்
வசூலிக்கக் கூடாது.
"பாடசாலை வைப்பதற்குத் தக்க இடங்கள் செல்வர்களால் ஏற்படுத்திக்
கொடுக்கபட வேண்டும். இது சௌகர்யப்படாத இடங்களில் கோயில்கள்,
மடங்கள் முதலிய பொது ஸ்தலங்களிலே பாடசாலை நடத்தலாம்."