பக்கம் எண் :

292விடுதலைப்போரில் தமிழ் வளர்ந்த வரலாறு

      ஐய ரென்றும் துரையென்றும் மற்றெனக்கு
          ஆங்கி லக்கலை யென்றொன் றுணர்த்திய
     பொய்ய ருக்கிது கூறுவன் கேட்பிரேல்;
          பொழுதே லாமுங்கள் பாடத்தில் போக்கிநான்
     மெய்ய யர்ந்து விழிகுழி வெய்திட
          வீறிழந்தென துள்ளம்நொய் தாகிட
     ஐயம் விஞ்சிச் சுதந்திரம் நீங்கியென்
          அறிவு வாரித் துரும்பென் றலைந்ததால்

     செலவு தந்தைக்கோர் ஆயிரஞ் சென்றது;
          தீதெ னக்குப்பல் லாயிரஞ் சேர்ந்தன;
     நலமோர் எட்டுணை யுங்கண்டி லேன்இதை
           நாற்ப தாயிரங் கோயிலிற் சொல்லுவேன்!

     என்று சத்தியஞ் செய்து சொல்கிறார்.

     "சி.சுப்பிரமணிய  ஐயர்  தேசிய    மகாகவி  பாரதியாராக   மலர்ந்தது
ஆங்கிலர்  தந்த  கல்வியாலல்லவா?"  என்னும்  வினாவுக்கு விடையளிப்பார்
போல,

      சிலமுன் செய்நல் வினைப்பய னாலும்நம்
     தேவி பாரதத் தன்னை யருளினும் 
     அலைவு றுத்துறும் பேரிருள் வீழ்ந்துநான்
     அழிந்தி டாதொரு வாறுபி ழைத்ததே!

      என்று பாடியுள்ளார்.

தேசியக் கல்வி எது?

      பாரதியார்,  "தேசியக் கல்வி"  பற்றி  இரண்டு பகுதிகளாக எழுதியுள்ள
தொடர்  கட்டுரையில்    "தேசியக்  கல்விக்கு  குடும்பக்  கல்வியே   வேர்"
என்கிறார். காங்கிரஸ் மகாசபை வகுத்தளித்த 'தேசியக் கல்வி' இன்னதெனவும்
தெளிவுபடுத்தியுள்ளார்.

      "தமிழ்நாட்டில்  தேசியக்  கல்வியென்பதாக  ஒன்று தொடங்கி, அதில்
தமிழ் பாஷையை ப்ரதானமாக நாட்டாமல் பெரும்பான்மைக் கல்வி இங்கிலீஷ்
மூலமாகவும்   தமிழ்   ஒருவித  உபபாஷையாகவும்  ஏற்படுத்தினால்,   அது
'தேசியம்'    என்ற    பதத்தின்   பொருளுக்கு    முழுதும்    விரோதமாக
முடியுமென்பதில் ஐயமில்லை.