கலாச்சாரப்புரட்சி!
இராமலிங்க சுவாமிகள் முற்றுந்துறந்த முனிவராயினும் , தம் தாய்
மொழியான தமிழிடத்துக் கொண்டிருந்த பற்றை மட்டும் துறக்காதவரானர். தாம்
காண விரும்பிய சாதி - சமய பேதங்களற்ற ஆன்மநேய ஒருமைப்பாடுடைய
சமுதாயத்திலே, மொழிப்பற்றுக்கும் நாட்டுப் பற்றுக்கும் இடமளித்தார்.
"....சாகாக் கல்வியை இலேசில் அறிவிப்பதாய்த் திருவருள் வலத்தாற்
கிடைத்த தென்மொழி யொன்றனிடத்தே மனம் பற்றச் செய்து அத்தென்
மொழிகளாற் பல்வகைத் தோத்திரப் பாட்டுக்களைப் பாடுவித்தருளினீர்!"1
என்ற வரிகளிலே, தம் தாய்மொழி யிடத்தே தமக்குப் பற்று ஏற்படும்
படி அருள்புரிந்த இறைவனுக்கு வள்ளலார் நன்றி செலுத்துவதோடு,
"ஸ்ரீ மாணிக்கவாசகர், சம்பந்தர்,நாவரையர், சுந்தரர், திருமூலர் முதலிய
மகா புருஷர்களால் சாத்திர தோத்திரங்களாக அருளிச் செய்யப்பட்டிருக்கும்
திருவாசகம், தேவாரம், திருமந்திரம் என்னும் பரமார்த்த ரகசியங்களையுடைய
தமிழ்."
"தமிழ்ப் பாஷையே அதிக சுலபமாகச் சுத்த சிவாநுபூதியைக்
கொடுக்கும்."2
என்றும் தம் தாய்மொழிக்குப் புகழ்மாலை சூட்டுகின்றார்.
வள்ளலார் இயற்றியுள்ள கவிதை வடிவிலான திருவருட்பா ஆறு
திருமுறைகளில் ஆறாவது திருமுறையும், உரை நடையிலான 'ஜீவகாருண்ய
ஒழுக்கம்' - 'நான்கு விண்ணப்பங்கள்'- 'மஹோப தேசம்' ஆகியவையும் சமயச்
சார்பற்ற சமூக இலக்கியங்களாகும். இவை, ஆன்மநேய ஒருமைப்பாட்டிற்கே
யன்றி, இந்திய தேசிய ஒருமைப்பாட்டிற்கும் உதவி புரிவனவாகும்.
திருவருட்பா முதல் ஐந்து திருமுறையும் மனுமுறை கண்ட வாசகம்
உள்ளிட்ட மற்ற உரைநடை நூற்களும் பிற்காலத்தில் வள்ளலாராலேயே
கைவிடப்பட்ட சைவ சமயச் சார்புடைய இலக்கியங்களாகும்.
1. சத்தியப் பெருவிண்ணப்பம்.
2. தமிழ் என்பதன் உரை.