சமஸ்கிருத ஆதிக்கத்தை வளர்க்க வடமொழிப் புலவர்களிலே சிலர் வழிவழி செய்து வரும் முயற்சியைச் சினங்கொண்டு எதிர்த்தார். ஆங்கில அரசில் தமிழகத்தில், புதிதாகத் தோன்றிய கல்லூரிகளும் சென்னைப் பல்கலைக்கழகமும் தமிழ்மொழியைப் பயிற்று மொழியாகக் கொள்ளவில்லையென்றாலும், தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குப் பெரிதும் துணைநின்றன என்பது சாஸ்திரியாரின் உறுதியான கருத்து. வடமொழி வாணர்களான நம்மவர்களோடு ஒப்பிடுமிடத்து, ஆங்கில மொழியினரான அன்னியர் இலக்கிய அளவிலேனும் தமிழ்வளர வாய்ப்பளித்தது பெரியகாரியம்தானே! தமிழ்மொழிக்கு மட்டுமன்றி. பாரதத்திலுள்ள பிரதேசமொழி ஒவ்வொன்றின் வளர்ச்சியிலும் ஆங்கில அரசினரும் அவ்வப்பிரதேசத்திலிருந்த வெள்ளைப் பாதிரிமார்களும் ஆர்வங் காட்டினர். தாய்மொழிப் பற்றற்ற வடமொழியினர் பிரதேசமொழிகளின் வளர்ச்சி கண்டு அமைதி கொள்ள இயலாதவராயினர். அதனால், பல்கலைக்கழகப்பாடத் திட்டத்திலிருந்து தமிழை விலக்கிவிட, ஆங்கில அரசிடத்தும் பல்கலைக்கழகத்தினிடத்தும் தமக்கிருந்த செல்வாக்கைப் பயன்படுத்தினர். "லார்டு கர்ஸன் இந்திய ராஜப்பிரதிநிதியாக இருந்த காலம் அது; வடதென் இந்தியாக்களில் இருந்த வடமொழியபிமானிகள் ஒன்று கூடிக்கொண்டு மத்திய சட்டசபையில் சுதேசத் தாய்மொழிகளையெல்லாம் சர்வகலாசாலைப் பாடப்பகுதிகளின்றும் நீக்கிவிட வேண்டும் என்பதாக ஒரு பிரேரணைகொண்டு வந்தனர். ராஜப்பிரதிநிதி, இப்பிரேரணையைச் சென்னைச் சர்வகலா சாலைக்கு அதன் கருத்தைத் தெரிவிக்கும்படி அனுப்பினார். சர்வகலாசாலையோவெனில், சென்னை ஆசிரியர் சங்கத்திற்கு இப்பிரேரணையையனுப்பி விட்டது. இதுசமயம் கி.பூர்ணலிங்கம் பிள்ளையவர்கள் 'எஸ்.பட்பீல்டு' என்னும் புனைபெயரில் சுதேசபாஷை நீக்கம் சம்பந்தமாக 'மெட்ராஸ்மெயில்' தினத்தாளில் பலகட்டுரைகள் தொடர்ச்சியாக எழுதி வந்தனர். வடமொழியபிமானிகள் இக்கட்டுரைகளின் ஆசிரியரை நேரில் சந்திக்கவும் விரும்பினர். பற்பல இடங்களில் கூட்டங்கள் கூடிச் சட்டசபைப் பிரேரணையைச் சட்டமாக்கிவிடப் பெரும்பாடு பட்டனர் வடமொழியபிமானிகள். "இவர்கள் வடமொழியை யபிமானிப்பதில் யாதொரு குற்றமுமில்லையாயினும், பிற தாய் மொழிகளை (அதுவும் தமிழை) அவமதிப்பது நமது சாஸ்திரியாருக்குச் சிறிதும் |