இயக்கத்தாலும் நாட்டு மொழி வளர்ச்சியோ, இலக்கியப் படைப்போ ஏற்படாவென்பதற்கு காங்கிரஸ் மகாசபையின் முதல் இருபதாண்டு கால வரலாறே தக்க சான்றாகும். தமிழ்மொழி, மக்களை வளர்த்ததோடு, மக்கள் மடியிலே தவழ்ந்து தானும் வளர்ந்து வந்திருக்கிறது. உலகிலுள்ள ஒவ்வொரு மொழியின் நிலையும் இதுதான். 1905 ஆம் ஆண்டுக்குப் பிறகு காங்கிரஸ் மகாசபையும் அது நடத்தி வந்த இந்திய விடுதலை இயக்கமும் சமுதாயத்தின் அடித்தளத்திலுள்ள மக்களின் சொத்துக்களாகிவிட்டன. அதன் பின்னர், தாய்மொழிப் புலமையுடைய வ.உ.சிதம்பரானர், சி.சுப்பிரமணிய பாரதியார், திரு.வி.க., வ.வே.சு. அய்யர் போன்றவர்கள் விடுதலை இயக்கத்தின் முன்னணித் தலைவர்களானார்கள். இதனால், தமிழ்மொழியின் வரலாற்றிலே முற்போக்கான ஒரு திருப்பம் ஏற்பட்டது. பழைய இலக்கியங்களைப் புதிய பார்வையிலே பார்த்தனர் தேசபக்தியுடைய தமிழர்கள். அத்துடனன்றி, தேசபக்தியை வளர்க்கும் புதிய இலக்கியங்களையும் படைத்தனர். ஆம்;தேசபக்தி தமிழை வளர்த்தது; தமிழ், தேசபக்தியை வளர்த்தது. இதனால் மொழித் துறையிலே ஒரு புதிய சகாப்தம் பிறந்தது. வங்காளத்தின் விழிப்பு 1905ஆம் ஆண்டிலே இந்தியாவின் வைசிராயாக இருந்த லார்ட்கர்சான் என்பவர், அப்போதிருந்த வங்க மாநிலத்தை இரண்டாகத் துண்டாடத் திட்டமிட்டார். அவரது திட்டம் தேசபக்தி மிகுந்த வங்க மாநிலத்தை ‘இந்து வங்கம்’ என்றும், ‘முஸ்லிம் வங்கம்’ என்றும் பிளப்பதாக இருந்தது. வங்க மொழி பேசும் வங்காளியர், இந்தியா முழுவதையுமே தங்கள் தாய்நாடாகக் கருதிய தேசபக்தர்கள் - தேசியவாதிகளாயினும், தங்கள் தாய்மொழியான வங்கமொழியிடத்துக் கொண்டுள்ள பற்றுதல் காரணமாக, அம்மொழி வழங்கும் வங்கமாநிலத்தைத் தங்கள் வீடுபோலக் கருதினர் அன்றுமட்டுமல்ல, இன்றுங்கூடத் தான் - ஏன்? இனி என்றுமே இந்நெறியிலிருந்து அவர்கள் விலகி நிற்க மாட்டார்கள். லார்டுகர்சான் வகுத்த வங்கப்பிரிவினைத் திட்டமானது, வங்காளியர்களின் தேசபக்திக்கும் தேசிய ஒருமைப்பாட்டுணர்ச்சிக்கும் பெரும் சோதனையாக அமைந்தது. வங்கத்தை மதக் கோடரி |