என்கிறார், காங்கிரஸ் பெருந்தலைவர்களில் ஒருவராக விளங்கிய டாக்டர். பட்டாபி சீதாராமய்யா. தாய்மொழிப் பண்டிதர்கள்- மதவாதிகள் தலைமையிலிருந்து மக்களைப் பிரித்தெடுத்து, அவர்களை பிரிட்டிஷ் விசுவாசிகளான பட்டதாரிகள் தலைமையின்கீழ் கொண்டுவரும் பணிக்காகவே ஹ்யூம் என்னும் ஆங்கிலேயர் காங்கிரஸ் மகாசபையைத் துவக்கினார் என்பதனை முன்பே அறிந்தோம். கட்டபொம்மன் காலந்தொட்டு காங்கிரஸ் மகாசபை தோன்றிய காலம்வரை, இடையிலுள்ள 90 ஆண்டு காலத்தில் நாட்டு மக்களிடையே வளர்ந்து வந்த உரிமைக்கனலை அணைத்துவிட்டு, உத்தியோகம் தேடும் சுயநல உணர்வை வளர்க்க ஹ்யூம் விரும்பினராதலால் சமுதாயத்தின் அடித்தளத்தில் மக்களுடைய வாழ்க்கைப் பிரச்னைகள் மீது மண்ணைக் கொட்டி மறைத்துவிட்டு, சமுதாயத்தில் ஆயிரத்துக்கு ஒன்றிருவராக உள்ள படித்துப் பட்டம்பெற்றவர்களின் உத்தியோகத் தேவைதான் சமுதாயம் முழுவதுக்குமான பொதுப்பிரச்னை என்று செய்து விடப்பார்த்தார். அந்த வகையில், வைஸ்ராய் டர்பன் பிரபுவும் ஹ்யூமுக்கு ஆதரவாக இருந்ததனை முன்பே அறிந்தோம். காங்கிரசிலே முன்னணித் தலைவர்களாக விளங்கிய ராஷ்பிகாரி கோஷ், சுரேந்திரநாத் பானர்ஜி போன்றவர்களும் காங்கிரசை உத்தியோகம் விரும்பிகளின் கூடாரமாகவே வைத்திருக்க விரும்பினர். தங்களிடமிருந்து மக்களை ஒதுக்கியும், மக்களிடமிருந்து தாங்கள் ஒதுங்கியும் வாழ்வதனைப் பெருமையாகக் கருதினர்.ஆனால்,சந்தர்ப்பச் சூழ்நிலை இந்த மிதவாதிகளுக்கு -தாய் மொழியிடத்துப் பற்றற்ற பரங்கி மொழி பக்தர்களுக்கு- எதிராகச் ‘சதி’ செய்துவிட்டது! தமிழக - வங்க - மகாராஷ்டிர மாநிலங்களில் பொங்கி எழுந்த புரட்சி வெள்ளம் உத்தியோகம் விரும்பிகளின் கூடாரமாக விளங்கிய காங்கிரஸ் மகாசபைக்குள்ளேயும் புகுந்துவிட்டது. அந்த வெள்ளத்திற்கு அணைகோலி, தங்கள் கூடாரத்தைக் காத்துக்கொள்ள காங்கிரஸ் மிதவாதிகள் செய்த முயற்சி பலிக்கவில்லை. 1906ல் சூரத் நகரில் நடந்த காங்கிரசிலே தாய்மொழியிடத்துப் பற்றுடைய தீவிரவாதிகளுக்கும், பரங்கி மொழியிடத்துப் பற்றுடைய மிதவாதிகளுக்கும் இடையே கடுமையான பலப்பரீட்சை நடந்தது. ஹ்யூம் தோற்றுவித்த அரச விசுவாசிகளைக் கொண்ட இந்திய தேசிய காங்கிரஸ் சூரத் நகரிலே மறைந்துவிட்டது. ஆம், தேசவிடுதலைகோரும் சூரர்களின் காங்கிரஸ் பிறந்தது சூரத் நகரிலே! |