பக்கம் எண் :

68விடுதலைப்போரில் தமிழ் வளர்ந்த வரலாறு

                    திலகர் சகாப்தம்

     இந்திய  விடுதலைப்போர்  வரலாற்றிலே 1906 முதல் 1920 வரையுள்ள
பதினைந்து  ஆண்டு  காலத்தைத் “திலகர் சகாப்தம்” என்று  அழைக்கலாம்.
அந்தக்  காலத்தில்தான்  நாட்டுப்  பற்றும்  மொழிப்பற்றும் ஒன்று கலந்தன.
இன்னொரு  வகையில்  சொல்வதானால்,  தமிழகத்திலே தேசியமும் தமிழும்
இரண்டறக்  கலந்தன. பாரிஸ்டர், ஐ.சி.எஸ்.,பி.ஏ., எம்.ஏ. போன்ற பட்டங்கள்
பெற்ற ‘கனவான்கள்’ மட்டுமே நடத்தி வந்த காங்கிரசை, தாய்மொழியில் கூட
எழுதப்படிக்கத்   தெரிந்து  வைத்திராத  பாமரர்கள்  கட்சியாகவும்  திலகர்
மாற்றினார்.   உத்தியோக   வேட்கையாளர்களின்   கூடாரமாக  விளங்கிய
காங்கிரசை,  உரிமைக்குப்  போராடும்   வீரர்களின்  பாசறையாகத்  திலகர்
மாற்றிய பின்னர், காங்கிரஸ் பெருந்தலைவர்கள் சாதாரணப் பொதுமக்களோடு
தொடர்பு  கொள்ளவேண்டிய  நிர்ப்பந்தத்திற்கு  உள்ளானார்கள். அதனால்,
தாங்கள் அரும்பாடுபட்டுக்  கற்ற  ஆங்கிலப் புலமையை மூட்டைகட்டி ஒரு
மூலையிலே   போட்டுவிட்டு,  மக்கள்  மொழியிலே    பேசவும்  எழுதவும்
முன்வந்தார்கள்.
 

     வங்கப்பிரிவினை   எதிர்ப்புக்   கிளர்ச்சியின்  விளைவாக,  பிரிட்டிஷ்
ஆட்சி   காங்கிரஸ்  தலைவர்களை  அடக்குமுறையால்  ஒடுக்க  முயன்றது.
பயங்கரமான சட்டங்களைப்பிறப்பித்து, தலைவர்களுக்கும் பத்திரிகைகளுக்கும்
‘வாய்ப்பூட்டுப் போட முயன்றது’. இந்தக் கொடுமைகளை எதிர்த்துப் போராட
வேண்டுமானால்,  பொதுமக்களின் ஆதரவு  தேவையென்பதனைக் காங்கிரஸ்
பெருந்தலைவர்கள்   உணர்ந்தனர்.   அடக்குமுறை  காரணமாக,  காங்கிரஸ்
பெருந்தலைவர்களான   பட்டதாரிகளுக்கும்  சாதாரணப்  பொதுமக்களுக்கும்
நடுவேஇருந்த   இடைவெளி   குறையலானது.  இதனாலும்,  மாநிலந்தோறும்
காங்கிரசின்  நடவடிக்கைகள்  அந்தந்த  மாநில  மொழியிலேயே நடத்தியாக
வேண்டிய   நிர்பந்தம்  ஏற்பட்டது.  அன்னிய  ஆட்சிக்கு  எதிராக  பாரத
சமுதாயத்தின்   அடித்தளம்   அசைவு  கண்டது.  உத்தியோகக்  கிளர்ச்சி
உரிமைப்புரட்சியாக மாறியது.

      உள்ளக்    கிளர்ச்சி    பெற்ற     கவிஞர்களெல்லாம்    உரிமைப்
புரட்சியைப்    பாடலானார்கள்.   தாய்   மொழியிலே  வளமாக  எழுதவும்
வன்மையாகப்    பேசவும்    ஆற்றல்    பெற்றவர்களெல்லாம்     தேசப்
பற்றுதலால்   உந்தப்பட்டு,   இதய   எழுச்சி    கொண்டு     விடுதலைப்