பாரதியாரின் இந்த முயற்சியால் வங்க மொழிப்பாடல் தமிழகத்தில் செல்வாக்கிழந்தது என்று சொல்வதற்கில்லை. விடுதலைப் போர் முடியும் வரையில் அதன் செல்வாக்கு ஓரளவு நீடிக்கத்தான் செய்தது. அது இயற்கை, எதிர்பார்க்க வேண்டியதுமாகும். ஆனால், பாரதியாரின் முயற்சியால் “தமிழால் முடியும்” என்னும் தத்துவம் தேசியப் பாசறையிலேயும் வெற்றிகண்டது. இன்னொரு மொழியின் துணையின்றி, தமிழ் மொழியின் துணைமட்டுமே கொண்டு, தமிழ் மக்களிடையே தேசபக்தியை வளர்க்க முடியும் - பிரிட்டிஷ் பேரரசை வெளியேற்றும் விடுதலைப் போரிலேயும் தமிழை வலிமை மிக்க கருவியாகப் பயன்படுத்த முடியும் என்பதனை, தமிழருக்கேயன்றி, பிற மொழியினருக்கும் புலப்படுத்தினார் பாரதியார். இந்தத் தொண்டிலே அவருக்கு இணையாக இன்னொருவரைச் சொல்வதற்கில்லை. பாரதியார், அரசியல் துறையில் மட்டுமின்றி, ஆன்மிகத் துறையிலும் தமிழ் மொழியின்மீது இன்னொரு மொழி ஆதிக்கம் பெறுவதை - தமிழின் தனித்தன்மை அழிவதை - விரும்பாதவரானார். சம்ஸ்கிருத மொழியின் வாயிலாகவே தமிழரிடை வாழ்வுபெற்ற நால்வேதங்களைக் கூடத் தமிழிலேமொழி பெயர்க்க வேண்டுமென்ற கருத்தை வெளிப்படுத்தி, தமிழில் பழமறையைப் பாடுவோம்-நித்தம் தலைமை பெருமை புகழ் கூடுவோம் என்று பாடினார், தமிழ் மொழியைக் கொண்டு, தமிழரிடையே தேசியத்தை வளர்த்த பாரதியார், தமிழ்ப் புலவர்களின் புகழையும் வளர்த்தார். தாயுமானவர் துதியாக ஒரு தனிப்பாடல் பாடினார். அவருடைய சந்தங்களைப் பயன்படுத்தி, பல தேசியப் பாடல்களைப் படைத்தார். ஒளவை, வள்ளுவர், இளங்கோ, கம்பர் ஆகிய பழம்பெரும் கவிஞர்களைப் புகழ்ந்து பாடி, அவர்களுடைய கவிதைகளுக்கும் காப்பியங்களுக்கும் விமர்சனம் கூறி, தேச விடுதலைப் போரிலே இரண்டறக் கலந்திருந்த தேசியவாதிகள் தமிழிடத்துப் பற்று கொள்ளவும் அதிலே பயிற்சி பெறவும் வழிவகுத்தார். சிவாவின் தமிழ்த் தொண்டு பாரதியார் காலத்திலேயே வாழ்ந்து, அவரோடு தோழமை பூண்டு, அவரைப் போலவே தமிழ் மொழிக்குத் தொண்டு செய்தோர் |