பக்கம் எண் :

1

என் சரித்திரம்

------

மகாமகோபாத்தியாய

டாக்டர் உ. வே. சாமிநாத ஐயர்

அத்தியாயம் 1

எங்கள் ஊர்

சற்றேறக்குறைய இருநூறு வருஷங்களுக்கு முன்பு தஞ்சாவூர்
ஸமஸ்தானத்தை ஆண்டு வந்த அரசர் ஒருவர் தம்முடைய பரிவாரங்களுடன்
நாடு முழுவதையும் சுற்றிப் பார்க்கும் பொருட்டு ஒருமுறை தஞ்சாவூரிலிருந்து
புறப்பட்டார். அங்கங்கே உள்ள இயற்கைக் காட்சிகளை யெல்லாம் கண்டு
களித்தும், ஸ்தலங்களைத் தரிசித்துக் கொண்டும் சென்றார். இடையில்,
தஞ்சைக்குக் கிழக்கே பதினைந்து மைல் தூரத்திலுள்ள பாபநாசத்திற்கு
அருகில் ஓரிடத்தில் தங்கினார். வழக்கம்போல் அங்கே போஜனம் முடித்துக்
கொண்ட பிறகு தாம்பூலம் போட்டுக் கொண்டு சிறிது நேரம் சிரம பரிகாரம்
செய்திருந்தார்; தம்முடன் வந்தவர்களோடு பேசிக்கொண்டு பொழுது
போக்குகையில் பேச்சுக்கிடையே அன்று ஏகாதசி யென்று தெரிய வந்தது.
அரசர் ஏகாதசியன்று ஒரு வேளை மாத்திரம் உணவு கொள்ளும்
விரதமுடையவர்; விரத தினத்தன்று தாம்பூலம் தரித்துக்கொள்வதும்
வழக்கமில்லை. அப்படியிருக்க, அவர் ஏகாதசி யென்று தெரியாமல் அன்று
தாம்பூலம் தரித்துக் கொண்டார். தஞ்சாவூராக இருந்தால் அரண்மனை
ஜோதிஷர் ஒவ்வொரு நாளும் காலையில் வந்து அன்றன்று திதி வார
நக்ஷத்திர யோககரண விசேக்ஷங்கள் இன்னவையென்று பஞ்சாங்கத்திலிருந்து
வாசித்துச் சொல்வார். அதற்காகவே அவருக்கு மான்யங்களும் இருந்தன.

அரசருடைய பிரயாணத்தில் ஜோதிஷர் உடன் வரவில்லை. அதனால்
ஏகாதசியை அரசர் தெரிந்துகொள்ள முடியவில்லை. எதிர்பாராதபடி
விரதத்திற்கு ஒரு பங்கம் நேர்ந்ததைப் பற்றி வருந்திய அரசர் அதற்கு என்ன
பரிகாரம் செய்யலாமென்று சில