பக்கம் எண் :

102என் சரித்திரம்

“இவ்வூர்க் கணக்குப்பிள்ளையவர்களிடம் படிக்கிறேன்.”
“என்ன படிக்கிறாய்?”
“திருவிளையாடற் புராணம்.”
“முன்பு வேறு யாரிடமேனும் படித்ததுண்டோ?”

“உண்டு. அரியிலூர்ச் சடகோபையங்காரவர்களிடமும் வேறு சிலரிடமும்
படித்தேன்” என்று கூறி நான் படித்த நூல்கள் இன்னவையென்றும்
தெரிவித்தேன்.

கேட்டதும் அவர், “அப்படியா? சடகோபையங்காரவர்கள் நல்ல
படிப்பாளி. அவர்களிடம் படித்தாய் என்பதைக் கேட்க எனக்கு மிகவும்
திருப்தியாக இருக்கிறது. எங்கே, ஒரு பாடல் சொல் கேட்போம்” என்றார்.
உடனே நான் பைரவி ராகத்தில் திருவேங்கடத்தந்தாதியிலிருந்து ஒரு பாடல்
சொன்னேன். பொருள் கூறும்படி அவர் கேட்டார். நான் சுருக்கமாகக்
கூறினேன். “நன்றாக இருக்கிறது” என்று சொல்லி அவர் சந்தோஷமடைந்தார்.
அவர் சொன்னது எனக்குக் கனகாபிஷேகம் செய்ததுபோல் இருந்தது.
அவ்வளவு பெரிய வித்துவான் என்னை ஒரு பொருட்படுத்தி என் பாட்டைக்
கேட்டுப் பாராட்டுவதென்றால் நான் எவ்வளவு பாக்கியம் செய்திருக்க
வேண்டும்!

“வேறு ஏதேனும் தெரிந்தால் சொல்லு” என்று கேட்டார் அவர்.

எனக்கு ஊக்கம் அதிகரித்தது. சதகங்களிலிருந்து சில பாடல்கள்
சொன்னேன்.

“திருவேங்கட மாலை படித்திருக்கிறாயா?” என்று அவர் கேட்டார்.

“இல்லை” என்றேன்.

“நான் இப்போது ஒரு பாடல் சொல்லுகிறேன். எழுதிக்கொள்” என்றார்.

“இன்று நாம் நரி முகத்திலேதான் விழித்திருக்கிறோம்” என்று எண்ணி
நான் மிக்க குதூகலமடைந்தேன்.