“தேனியலுங் கூந்தலார் செங்கரமு மாதவத்தோர் மேனியுமை யம்பொழியும் வேங்கடமே-ஞானியர்கள் [ணெய் தாங்குறியெட் டக்கரத்தார் தாளுரன்மேல்-வைத்துவெண் தாங்குறியெட் டக்கரத்தார் சார்பு” (திருவேங்கடமாலை, 57) என்ற பாடலை அவர் மெல்லச் சொல்லி என்னை எழுதிக்கொள்ளச் செய்தார். பிறகு அதன் பொருளையும் சொன்னார். அப்பால், “எங்கே, அதை ஒரு முறை படித்து அர்த்தம் சொல், பார்க்கலாம்” என்று உரைத்தார். “இவருடைய மனத்தில் நம்மைப்பற்றி நல்ல அபிப்பிராயத்தை உண்டாக்க வேண்டும்” என்று மனம் அவாவியது. மிகவும் நிதானமாகப் படித்துப் பயபக்தியுடன் நான் கேட்டபடியே பொருள் சொன்னேன். கஸ்தூரி ஐயங்காருக்கு என்பால் அன்பு அரும்பியது. “நல்ல கிராஹ்ய சக்தி இருக்கிறது. நன்றாய்ப் படித்துக் கொண்டு வா” என்றார் அவர். வாக்களித்தது அங்கே இருந்தவர்களுள் ஒருவர், “தாங்களே இந்தப் பையனுக் குப்பாடஞ்சொல்லிக் கொடுக்க முடியுமா?” என்று வினவினார். அவர், “நான் பாடம் சொல்வதற்கு ஒரு தடையுமில்லை. கார்குடிக்கு வந்தால் வேண்டிய சௌகரியம் செய்வித்து இவனைப் படிப்பிக்கிறேன். இந்தப்பிள்ளை விருத்திக்கு வருவானென்று தோற்றுகிறது” என்று விடை கூறினார். அந்தக் கூட்டத்தில் இருந்து எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்த என் தந்தையார், “தாங்கள் சொன்னபடியே கார்குடிக்கு வருகிறோம். இவனுக்குத் தாங்கள் பாடம் சொல்ல வேண்டும்; மற்றக் காரியங்களில் இவன் புத்தி செல்லவில்லை” என்று சொன்னார். அவர் இவ்வாறு கூறியபோது அவருடைய பேச்சில் உணர்ச்சி ததும்பியது. கிடைத்தற்கரிய பேறு கிடைத்தது போல இருந்தது கஸ்தூரி ஐயங்காருடைய வார்த்தை. “அங்கே வந்து விடுங்கள். நானும் என் சொந்தக்காரர்களும் உங்களுக்கு வேண்டிய சௌகரியங்கள் செய்து கொடுக்கிறோம். இவனையும் படிப்பிக்கிறேன்” என்று கஸ்தூரி ஐயங்கார் சொன்னார். அப்போது சாமி ஐயங்காரென்ற ஒருவர் அங்கே வந்தார். அவரும் கார்குடியில் இருப்பவரே. கல்யாணத்தின் பொருட்டுக் |