பக்கம் எண் :

118என் சரித்திரம்

அறியாத பெண் பிள்ளைகள், “நந்தன் சரித்திரம் நடக்குது” என்று
சொல்லிக் கொண்டு வந்து கேட்பார்கள். களத்தூரைச் சுற்றியுள்ள
ஊர்களிலிருந்து பலர் தினந்தோறும் வந்து கேட்டுச் செல்வார்கள்.

அத்தியாயம்-21

சிதம்பர உடையார்

என் தந்தையார் களத்தூரில் நந்தன் சரித்திரம் நடத்திய பொழுது வந்து
கேட்டவர்களுள் சிதம்பர உடையாரென்பவர் ஒருவர். அவர் அவ்வூருக்கு
வடபாலுள்ள மறவனத்தமென்னும் ஊரிலிருந்த பெரிய தனவான். சிவபக்தி
மிக்கவர். எப்போதும் விபூதி ருத்திராட்ச தாரணத்தோடே இருப்பார்.
ஏழைகள்பால் அன்பும் இரக்கமுமுடையவர். பிறருடைய கண்ணைக்கவரும்
சிவந்த நிறத்தினர்.

அவருக்கு நான்கு குமாரர்களும் நான்கு குமாரிகளும் இருந்தனர்.
நான்கு பிள்ளைகளுக்காக நான்கு வீடுகள் ஒரு சிறகிலும் நான்கு
மாப்பிள்ளைகளுக்காக நான்கு வீடுகளை மற்றொரு சிறகிலும், கட்டிக் கொடுத்து
அங்கே அவர்களைத் தனித் தனியே இருக்கச் செய்தனர். வரும்படிகளைப்
பகிர்ந்து கொடுத்து இரண்டு சிறகுக்கும் கோடியில் தாம் தனியே ஒரு வீடு
கட்டிக்கொண்டு தம் மனைவியுடனிருந்து கடவுள் வழிபாடு செய்துகொண்டும்
சுகமாக வாழ்ந்து வந்தார். நான் பார்த்தபொழுது அவருக்கு எழுபது
பிராயமிருக்கும்.

குடும்பத்தில் ஒற்றுமை சிறிதும் குலையாமல் இருந்தது. பணக்காரர்கள்
அவருடைய நிலையையும் ஒழுங்கையுங் கண்டு பாராட்டினார்கள். எவ்வளவு
பிராயமானாலும், குடும்ப நிர்வாகம் அனைத்தையும் தம் கையில்
வைத்துக்கொண்டு வயசு வந்த பிள்ளைகளை அடக்கியாளும் தந்தையார் பலர்
தாமும் சுகம் பெறாமல் தம் குடும்பத்தினருக்கும் சந்தோஷத்தை
உண்டாக்காமல் வாழ்வது உலக இயல்பு. குடும்பப் பொறுப்பு
இத்தகையதென்பது அறியாத அப்பிள்ளைகள் தம் தந்தையார் காலத்திற்குப்
பிறகு அடிபட்ட பழக்கமில்லாமையால் குடும்பத்தை நன்றாக நடத்தி
வரத்தெரியாமல் துன்புறுகிறார்கள். இத்தகைய கஷ்டங்களை நினைத்தே
சிதம்பர உடையார் தம் பிள்ளைகளும் மாப்பிள்ளைகளும் குடும்ப
நிர்வாகத்தைத் தனித் தனியே நடத்தி வரும்படி ஏற்பாடு செய்தார். அதனால்
அவர்களும் உடையாரும் கவலையின்று வாழ்ந்து வந்தனர்.