பக்கம் எண் :

சிதம்பர உடையார் 119

சிவ பக்திச் செல்வராதலின் நந்தனார் சரித்திரம் கேட்பதில் அவருக்கு
அதிக ஆவல் இருந்தது. அச்சரித்திரம் தொடங்கிய நாள் முதல் தினந்தோறும்
தவறாமல் வந்து கேட்டுச் செல்வார். அவருடைய நெஞ்சம் நந்தனார்
சரித்திரத்தைக் கேட்டு உருகியது. முதல் நாளில் பிரசங்கம் முடிந்தவுடன் அவர்
என் தந்தையாரிடம் வந்து பணிந்தார். “கிருபை வைக்க வேண்டும்; அடியேன்
ஒவ்வொரு நாளும் வந்து கேட்டுப் போவேன்” என்று சொல்லி விடை பெற்றுச்
சென்றார். சிறந்த செல்வரும் செல்வாக்குடைய வருமாகிய அவர் அவ்வளவு
பணிவோடு இருந்தது எங்களுக்கும் பிறருக்கும் பெரிய ஆச்சரியத்தை
விளைவித்தது. அவருக்கு ஒரு குதிரை உண்டு. எங்கும் அதன் மேல் ஏறி
வருவார். ஒவ்வொரு நாளும் அவர் வந்து என் தந்தையாரை வணங்கிவிட்டுச்
செல்வார். சரித்திரம் நடைபெறும் பொழுது அவர் கண்ணீர்வார மெய்
சிலிர்க்கப் பரவசமாகிக் கேட்பார். சிதம்பரத்தின் பெருமையையும் அந்த
ஸ்தலத்திற்குச் செல்லவேண்டுமென்று ஏங்கி நின்ற நந்தனாரது பக்தித்
திறத்தையும் கேட்கக் கேட்க அவரே நந்தனாராகத் தொடங்கினார்.

“தில்லை தில்லை யென்றாற் பிறவி
இல்லை இல்லை என்று மறைமொழியும்”

என்ற கீர்த்தனத்தை அவர் சொல்லிக்கொண்டே இருப்பார்; கண்ணீர்
விடுவார். யாரேனும் அவருடைய பெயரைக் கேட்டால் “என் பெயர் தில்லை”
என்று சொல்வார். சிதம்பரமும் தில்லையும் ஒன்றாயினும் ‘தில்லை’ என்ற
சொல்லைச் சொல்லும்போது அவர் ஒரு தனி இன்பத்தை அனுபவித்தார்.
நந்தனார் எப்பொழுதும் தில்லை ஸ்தலத்தைப்பற்றிய ஞாபகத்திலே எவ்வாறு
தம்மையே மறந்தாரோ அந்த நிலைமைக்குச் சிதம்பரவுடையாரும்
வந்துகொண்டிருந்தார். அதற்கு முன் அவர் பல சிவஸ்தலங்களைத்
தரிசித்தவரேயானாலும் நந்தனார் சரித்திரத்தைக் கேட்ட பின்பு அவருக்குச்
சிதம்பரத்தில் மிகுதியான பற்று உண்டாயிற்று. சரித்திரம் நிறைவேறியவுடன்
சிதம்பரம் சென்று அங்கே அறுபது ரூபாயில் சோமவாரக் கட்டளை
நடத்தும்படி ஒரு தீக்ஷிதர் முகமாக ஏற்பாடு செய்து அந்த வட்டி வருவதற்குரிய
முதலையும் கொடுத்துவிட்டு வந்தார்.

சிதம்பர உடையாருக்கு என் தந்தையாரிடம் பக்தி அதிகமாயிற்று.
அடிக்கடி வந்து வணங்கி ஏதாவது சொல்லச் சொல்லிக் கேட்டுவிட்டுச்
செல்வார். நந்தனார் சரித்திரம் நிறைவேறியபோது உடையார் நூறு ரூபாய்
அளித்தார். அன்றியும் அயலூரிலிருந்த