பக்கம் எண் :

காரிகைப் படம் 139

தாயார் குன்னத்தில் இருந்தார். அன்று எங்களுக்கு முன்பே கார்குடி
கஸ்தூரி ஐயங்கார் முதலிய மூவரும் அங்கே வந்திருந்தனர். நால்வரும்
என்னைச் செங்கணம் ரெட்டியாரிடம் ஒப்பித்து என் இயல்பைப் பற்றிக்
கூறினர்: “இவனை நல்ல நூல்கள் படிக்கும் படி செய்யவேண்டும். இவன் அதே
நாட்டமாக இருக்கிறான். வேறொன்றிலும் இவன் புத்தி செல்லவில்லை.
அன்றியும் படிக்கிற வரையில் இவன் குடும்பத்தையும் பாதுகாக்க வேண்டும்”
என்று கேட்டுக் கொண்டனர். ரெட்டியார் அப்படியே செய்வதாக
ஒப்புக்கொண்டார். இயல்பாகவே உபகார சிந்தையை உடைய அவர் இந்த
நான்கு பேர்களும் சொல்லும்போது என்னை ஏற்றுக் கொள்வதற்கு என்ன
தடை?

ரெட்டியார் என்னை நோக்கி, “என்ன என்ன நூல்களைப் படித்
திருக்கிறீர்?” என்று கேட்டார். நான் இன்ன இன்ன நூலை இன்னார்
இன்னாரிடத்தில் பாடம் கேட்டேனென்பதைச் சொல்லிவிட்டு, “நான் இந்த
நூல்களைப் பாடங் கேட்டிருந்தாலும் ஒரு நூலிலாவது எனக்குத் தெளிவான
ஞானம் உண்டாகவில்லை. எல்லாக் குறையும் தாங்கள் தீர்க்கவேண்டும்” என்று
கேட்டுக்கொண்டேன். அவர் புன்னகையுடன், “அப்படியே ஆகட்டும்” என்றார்.

பிறகு “நீர் நன்னூல் காண்டிகை உரையைப் பாடம் கேட்டிருத்தலால்
எழுத்துச் சொல் இலக்கணங்கள் ஒருவாறு தெரிந்திருக்கும். இந்த ஞானமே
மேலே இலக்கியங்களைப் படித்தற்குப் போதுமானது. அடுத்தபடியாக
யாப்பிலக்கணம் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்; ஆதலால் முதலில்
யாப்பருங்கலக் காரிகையைப் பாடம் சொல்லுகிறேன் அப்பால் சௌகரியம்போற்
பார்த்துக் கொள்ளலாம்” என்று கூறி என் தந்தையாரைப் பார்த்து, “நீங்கள்
குடும்பத்துடன் இங்கே வந்து விடுங்கள்” என்றார். என் தந்தையாருக்கும்
எனக்கும் மகிழ்ச்சியினால் உள்ளம் பூரித்தது. யாவரும் ரெட்டியாரிடம் விடை
பெற்றுக்கொண்டு குன்னம் வந்தோம். என் தந்தையார் என் தாயாரையும்
என்னையும் அழைத்துக்கொண்டு செங்கணத்துக்கு ஒரு நல்ல நாளில் வந்தார்.
இடையிலே நின்றிருந்த தமிழ்க் கேள்வித் துறையில் மீட்டும் நான் புகுந்தேன்.

ரெட்டியார் எங்களுக்காக ஒரு ஜாகை ஏற்படுத்தி அதில் இருக்கும்படி
செய்து, உணவுப் பொருள்களையும் வேண்டிய அளவு முன்னதாக அனுப்பி,
செலவுக்குப் பணமும் கொடுத்து ஆதரித்தார். ஒவ்வொரு மாத ஆரம்பத்திலும்
தவறின்றி இரண்டு கல நெல்லும் இரண்டு ரூபாயும் அனுப்பி விடுவார்.