பக்கம் எண் :

138என் சரித்திரம்

நாள் என் தந்தையாரைப்பார்த்து, “இவனைச் செங்கணம்
சின்னப்பண்ணை விருத்தாசல ரெட்டியாரிடம் கொண்டு போய் விட்டால்
அவர் பாடஞ் சொல்வாரே” என்றார்.

“விருந்தாசல ரெட்டியார் என்பவர் யார்?” என்று என் தந்தையார்
கேட்டார்.

“அவர் செங்கணத்திலுள்ள பெரிய செல்வர், உபகாரி, தமிழ்
வித்துவான், இலக்கண இலக்கியங்களை நன்றாகப் பாடஞ் சொல்லும் சக்தி
வாய்ந்தவர்.”

“அவரிடம் போயிருந்தால் ஆகாரம் முதலியவற்றிற்கு என்ன செய்வது?”

“நீங்கள் குடும்பத்துடன் சென்று அங்கே இருக்கலாம். அவரே
உங்களுக்கு வேண்டிய சௌகரியங்களையெல்லாம் செய்து கொடுப்பார். நான்
உங்களை அழைத்துச் சென்று அவரிடம் விடுகிறேன். அவர் என் நண்பர்”
என்று ராமையங்கார் சொன்னார். அவர் பின்னும் விருத்தாசல
ரெட்டியாருடைய குணாதிசயங்களைச் சொன்னார். தமிழ்ச் சித்த வைத்திய
நூல்களில் ஐயங்கார் நல்ல பயிற்சியுடையவர். அதனால் அவருக்கும்
ரெட்டியாருக்கும் பழக்கம் உண்டாயிற்று. அந்தப் பக்கங்களில் இருந்த தமிழ்
வித்துவான்கள் யாவருக்கும் ரெட்டியாருடைய பழக்கம் உண்டு.

செங்கணம் சென்றது

ராமையங்கார் விருந்தாசலரெட்டியாரைப் பற்றிச் சொன்ன போது
எனக்குச் சிறிது ஆறுதல் உண்டாயிற்று. காலத்தை வீணாகக் கழிக்காமல்
இயன்றவரையில் பாடம் கேட்கலாமென்று எண்ணினேன். என் தந்தையார்
செங்கணம் செல்ல உடன்பட்டார்.

கார்குடியிலிருந்த கஸ்தூரி ஐயங்கார், சாமி ஐயங்கார், களத்தூர்
ராமையங்கார் என்பவர்களுக்கும் விருத்தாசல ரெட்டியார் நண்பர். குன்னம்
ராமையங்கார் செங்கணத்திற்குப் புறப்பட ஒரு நாளை நிச்சயித்துக் கூறிய பின்
மேற்கூறிய மூவருக்கும் அதனை அறிவிக்க, அவர்களும் அன்று
செங்கணத்திற்கு வந்து என்னை ரெட்டியாரிடம் சேர்ப்பிக்க வருவதாகச்
சொல்லியனுப்பினர்.

குறித்த தினத்தில் குன்னம் ராமையங்கார் என்னையும் என்
தந்தையாரையும் அழைத்துக்கொண்டு செங்கணம் சென்றார். என்