பக்கம் எண் :

பிள்ளையவர்கள் முன் முதல் நாள் 157

மற்ற யாவரும் வேறு வேறு துறையில் என்னைச் செலுத்த
எண்ணியபோது என் எண்ணம் நிறைவேறுவது எவ்வளவு கஷ்டமானது!
திருவருளின் துணையால் அது நிறைவேறும் நிலைமையில் இருந்தது.
“தமிழ்நாட்டிலே இணையற்று விளங்கும் ஒரு தமிழாசிரியரிடம் நான்
அடைக்கலம் புகுந்து தமிழமுதத்தை வாரி நுகர்ந்து செம்மாந்து நிற்பேன்”
என்ற நினைவில் முன் பட்ட பாட்டையும் மேலே என்ன செய்வது என்ற
யோசனையையும் மறந்தேன். ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு யுகமாகத்
தோற்றியது. பிள்ளையவர்கள் முன்னே சென்று அவரைக் கண்ணாரக் கண்டு
அவர் பேசுவதைக் கேட்டு அவர் மாணாக்கர் கூட்டத்தில் ஒருவனாகச் சேரும்
சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து நின்றேன்.

அத்தியாயம்-27

பிள்ளையவர்கள் முன் முதல் நாள்

மாயூரத்திற்கு நாங்கள் காலையில் வந்து சேர்ந்தோம். உடனே என்
தந்தையார் ஸ்நானம் முதலியன செய்துவிட்டுப் பூஜை செய்யத் தொடங்கினார்.
என் தாயார் இல்லாத காலங்களில் அவரது பூஜைக்கு வேண்டிய
பணிவிடைகளை நானே செய்வது வழக்கம். அவ்வாறே அன்றும் செய்தேன்.
அன்று புரிந்த பூஜையில் என் நல்வாழ்வைக் குறித்து அவர் கடவுளைப்
பிரார்த்தித்து உருகியிருக்க வேண்டுமென்று தெரிந்தது.

பூஜைக்குப் பின் போஜனம் செய்தோம். அப்பால் தந்தையார் சிரம
பரிகாரம் பண்ணிக் கொண்டார். பிறகு பிற்பகல் மூன்று மணியளவில் நானும்
அவரும் பிள்ளையவர்களைப் பார்க்கப் புறப்பட்டோம். போகும் வழியில் ஸ்ரீ
மாயூரநாதர் ஆலயம் இருந்தமையின் உள்ளே சென்று சுவாமி சந்நிதானத்தில்
நமஸ்காரம் செய்துவிட்டுச் சென்றோம்.

அக்காலத்தில் பிள்ளையவர்கள் மாயூரத்தில் திருவாவடுதுறை
யாதீனத்துக்குரிய கட்டளை மடத்தை அடுத்து மேல் பாலுள்ள வீட்டில் இருந்து
வந்தனர். நாங்கள் அவ்வீட்டிற்குச் சென்றோம்.

இருவர்

அங்கே முன் கட்டில் இருவர் இருந்தனர். அவருள் ஒருவர் விபூதி
ருத்திராட்சம் தரித்துக்கொண்டு விளங்கினார். என்