பக்கம் எண் :

158என் சரித்திரம்

தந்தையாரும் நானும் அவரையே பிள்ளையவர்களென்று எண்ணினோம்.
மற்றொருவரிடம் மெல்ல என் தந்தையார், “பிள்ளையவர்கள் இவர்களா?”
என்று கேட்டார். அவர் என் தந்தையாரது தோற்றத்தில் ஈடுபட்டு இனிய
முகத்தினராகி, “இவர் திருவாவடுதுறை மகாலிங்கம் பிள்ளை” என்று கூறினார்.

உடனே தந்தையார், “மகா வித்துவான் பிள்ளையவர்கள் எங்கே
இருக்கிறார்கள்?” என்று கேட்டனர்.

இந்த இரண்டு கேள்விகளுக்கும் இடையே மிகவும் சிறிதளவு காலமே
சென்றிருக்கும். அதற்குள் என் மனத்தில் பயமும் சந்தேகமும் இன்பமும் மாறி
மாறிப் பொருதன. அங்கே பிள்ளையவர்கள் இல்லையென்பதை அறிந்தவுடன்,
“அவர்கள் எங்கேயாவது வெளியே சென்றிருக்கலாம்” என்ற எண்ணம் எனக்கு
முதலில் தோற்றவில்லை. “அவர்கள் ஊரில் இல்லையோ? வெளியூருக்குச்
சென்றிருக்கிறார்களோ! நாம் வந்த காரியம் இப்போது கைகூடாதோ? நாம்
திரும்பி ஊருக்குப்போக நேர்ந்துவிடுமோ?” என்று பலவாறு எண்ணினேன்.

“இந்த வீட்டின் பின்புறத்துள்ள தோட்டத்தில் வேலை நடப்பதால்
பிள்ளையவர்கள் அதைக் கவனித்துக் கொண்டு அங்கே இருக்கிறார்கள்” என்று
அக்கனவான் கூறினார். அப்போதுதான் எனக்குத் தைரியம் உண்டாயிற்று.

என் தந்தையாரிடம் பேசிக்கொண்டிருந்தவர் மாயூரத்துக்கு அருகிலுள்ள
குற்றாலம் என்னும் ஊரினராகிய தியாகராஜமுதலியாரென்னும் செங்குந்தச்
செல்வர். பிள்ளையவர்களைக் கொண்டு அந்த ஸ்தலத்தின் புராணத்தைத்
தமிழில் இயற்றுவித்தவர். அப்புராணம் திருத்துருத்திப் புராணம் என வழங்கும்.

என் தந்தையார் அங்கிருந்த மற்றொருவராகிய மகாலிங்கம்
பிள்ளையைப் பார்த்து, “திருவாவடுதுறைக் கந்சாமிக் கவிராயரை உங்களுக்குத்
தெரியுமா? அவர் சௌக்கியமாக இருக்கிறாரா?” என்று கேட்டார்.

“அவர் சில காலத்திற்கு முன்பு சிவபதம் அடைந்தார்” என்று அவர்
விடை கூறினார்.

தந்தையார் அச்செய்தியைக் கேட்டு வருத்தமடைந்தார். கந்தசாமிக்
கவிராயர் என் பிதாவுக்குப் பழக்கமானவர். திருவாவடுதுறை யாதீன
வித்துவானாக இருந்தவர், அரியிலூர்ச் சடகோபையங்