பக்கம் எண் :

பாடம் கேட்கத் தொடங்கியது 167

என்னிடம் அளித்து. “இதில் ஏதேனும் ஒரு செய்யுளை எடுத்துப்
படியும்” என்று சொன்னார். நான் அந்தப் புஸ்தகத்தைப் பிரித்து நாட்டுப்
படலத்திலுள்ள ஒரு செய்யுளை அமைதியாக இசையோடு மெல்லப்
படிக்கலானேன். நான் படித்த செய்யுள் வருமாறு:

“புன்மை சால்கிழங் ககழ்ந்திடும் போதெதிர் போதும்
அன்மை தீர்மணி சுரையிரும் பாலகற் றிடுவார்
வன்மை மேவிய தாயினு மாண்பறி யாரேல்
மென்மை மேவிழி பொருளினு மிழிந்ததாய் விடுமே”

(நாட்டுப்படலம், 38).

முதலில் ஒரு முறை மனத்துள் படித்துப் பார்த்த பிறகே வாய் விட்டுப்
படித்தேன். ஆதலால் நான் தடையில்லாமல் படிக்க முடிந்தது. பிள்ளையவர்கள்
அந்தச் செய்யுளின் பொருளைத் தெளிவாக எனக்குச் சொன்னார்; பதம்
பதமாகப் பிரித்துப் பொருள் கூறினார்; பதசாரமும் சொல்லி விளக்கினார்.

“குறிஞ்சி நிலத்திலுள்ள வேடர்கள் காட்டில் தங்களுக்கு ஆகாரமாக
உதவுகின்ற கிழங்குகளைத் தோண்டி எடுக்கிறார்கள். அப்பொழுது பூமியில்
புதைந்து கிடக்கும் மணிகள் வெளிவருகின்றன அவற்றைக் கடப்பாறையினாலே
ஒதுக்கிவிட்டு மேலும் தோண்டுகிறார்கள். அவர்களுக்குக் கிழங்கினிடம் உள்ள
மதிப்பு மணியினிடம் இல்லை. உலகத்தில் எவ்வளவு சிறந்த பொருளா
யிருப்பினும் அதன் பெருமையை அறியாதவரிடம் அகப்பட்டால் மிகவும்
இழிந்த பொருளைப் போலாகிவிடும்.

“இந்த விஷயம் அப்பாட்டில் சொல்லப்பட்டிருக்கிறது. தமிழ்க்
காவியங்களில் நாட்டு வருணனையில். இத்தகைய செய்திகளை அமைப்பது
புலவர் மரபு. அப்படி வருணிக்கும் பொழுது குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம்,
நெய்தல் என்னும் ஐந்து வகை நிலங்களையும் அவற்றில் நிகழும்
செய்திகளையும் தனித் தனியே விரிவாக வருணிப்பார்கள். இந்த வருணனை,
மலையும் மலையைச் சார்ந்த இடமுமாகிய குறிஞ்சி நிலத்திலுள்ள வேடர்கள்
இயல்பையும் செயல்களையும் சொல்லுமிடத்தில் வருகின்றது. வருணனையோடு
உலக இயல்பாகிய நீதி ஒன்றும் இச்செய்யுளில் அமைந்திருக்கின்றது.

“அடுத்த பாடலையும் படியும்” என்று பிள்ளையவர்கள் சொல்லவே
நான் படித்தேன்:-