“முறிவி ராயபைம் பொழிலிற்செம் முழுமணிநோக்கிச் செறிவ தீயெனக் குடாவடி வேறுகான் சென்று பிறவி லாவிர வழலெனப் பிறங்கவுள் வெதும்பும் அறவி லாரெங்குச் சாரினுஞ் சுகமடை யாரால்.” “தழைகள் விரவியுள்ள பசுமையான சோலையில் இருக்கும் சிவப்பாகிய மாணிக்கத்தைப் பார்த்த கரடியானது, அதனைத் தீயென்று எண்ணிப் பயந்து வேறு காட்டுக்குச் செல்ல, அங்கே இரவில் அக்காடு சோதிமரம் நிறைந்தமையால் நெருப்புப் போலப் பிரகாசிக்க அதைக் கண்டு, இந்த நெருப்பு நம்மை விடாதுபோல் இருக்கின்றதேயென்று எண்ணி மனத்துள்ளே துயரத்தையடையும்; அறிவில்லாதவர்கள் எங்கே போனாலும் சுகம் அடையமாட்டார்கள்” என்பது இதன் பொருள். பிள்ளையவர்கள் இதற்கும் இவ்வாறு பொருள் கூறி, “இந்த இரண்டு செய்யுட்களுக்கும் இப்போது நீர் பொருள் கூறும்” என்று சொன்னார். நான் கேட்டவாறே உரைத்தேன். பிறகு இலக்கண சம்பந்தமான சில சிறு கேள்விகளைக் கேட்டார். நான் விடை சொன்னேன். “இந்தச் செய்யுள் எவ்வகையைச் சார்ந்தது?” “இது கலிநிலைத்துறை” “வெண்பாக்களைச் சீர்பிரித்து அலகூட்டுவீரா?” “ஏதோ தெரிந்த வரையிற் செய்வேன்.” உடனே சில வெண்பாக்களை எப்படிச் சொன்னால் தளைபிறழ்ந் தனவாகத் தோற்றுமோ அப்படியே சொல்லித் தனித்தனியே சீர் பிரித்துச் சொல்லச் சொன்னார். நான் ஜாக்கிரதையாகச் சீர்பிரித்துச் சொன்னேன். “நெல்லுக் கிறைத்த நீர்வாய்க்கால் வழியோடிப் புல்லுக்கு மாங்கே பொசியுமாம்” என்ற செய்யுளைச் சீர்பிரித்துச் சொல்லுகையில், “நெல்லுக்-கிறைத்தநீர்-வாய்க்கால்-வழியோடிப்” என்று தனித்தனியே பிரித்து அலகூட்டிச் சொன்னேன். “நெல்லுக்-கிறைத்த-நீர் வாய்க்கால்-வழியோடி, என்று பிரித்தால்தானே மோனை அமைகிறது? நீர் பிரிக்கும்போது மூன்றாம் சீர் வாய்க்கால் என்றல்லவோ ஆகிவிடும்? அப்போது மோனை இராதே!” என்றனர். |