பக்கம் எண் :

பாடம் கேட்கத் தொடங்கியது 169

“அப்படியே பிரித்தால் வெண்டளை பிறழ்ந்து விடும். இறைத்த-நீர்
வாய்க்கால் என்பது ஆசிரியத்தளையும்: நீர்வாய்க்கால்-வழியோடி என்பது
கலித்தளையும் ஆகிவிடும். வெண்பாவில் பிறதளை விரவாது” என்று விடை
பகர்ந்தேன்.

“நல்லது. யாப்பிலக்கணத்தை நன்றாகப், படித்திருக்கிறீர்.”

“காரிகை பாடம் சொன்ன ரெட்டியாரவர்கள் மிகவும் தெளிவாக எனக்குக்
கற்பித்தார்கள்.”

அப்போது பிள்ளையவர்கள் ரெட்டியாரை மிகவும் பாராட்டிப் பேசினார்.

அன்று பிள்ளையவர்கள் என் தமிழறிவு இவ்வளவினதென்பதை ஒருவாறு
பரிசோதித்து அறிந்து கொண்டாரென்றே எண்ணினேன். அவர்கள்
வாயிலிருந்து இரண்டு செய்யுட்களுக்குப் பொருள் கேட்டு அப்படியே
சொல்லிவிட்டோமென்ற ஒரு திருப்தியும், “இன்றே பாடம் கேட்க ஆரம்பித்து
விட்டோம்” என்ற எண்ணமும் எனக்கு உண்டாயின.

“என்றைக்கு நல்ல நாளாக இருக்கிறது? பாருங்கள். சீக்கிரமே பாடம்
ஆரம்பித்து விடலாம்” என்று பிள்ளையவர்கள் என் தந்தையாரிடம் கூறினார்.
அப்போது அவர் மனத்திலும் என்னைப் பற்றித் திருப்தியான எண்ணம் பதிந்து
விட்டதென்றே தோற்றியது.

“இன்றே நல்ல நாள்; பாடமும் கேட்கத் தொடங்கி விட்டோமே” என்று
நான் மனத்துக்குள் சொல்லிகொண்டேன். என் தந்தையார், “நாளைக்கு நல்ல
தினமாக இருக்கிறது. பாடம் ஆரம்பிக்கலாம்” என்றார்.

“மெத்த ஸந்தோஷம். அப்படியே செய்யலாம்” என்று தம்
உடன்பாட்டை அவர் தெரிவித்தார்.

பாடம் ஆரம்பித்தது

மறுநாள் நாள் பாடம் கேட்கத் தொடங்கினேன். முதலில் நைடதத்தை
அவர் பாடம் சொல்ல ஆரம்பித்தார். அதில் சில பாடல்களைப் படிக்கச்
செய்து அவற்றின் பொருளைக் கூறினார். அங்கேயுள்ள விசேஷங்களை
விளக்கியும், இலக்கணச் செய்திகளைப் புலப்படுத்தியும் வந்தார். நான் அந்த
நூலை முன்பே பல தடவை படித்திருந்தும் அவர் கூறிய முறையிற் பாடம்
கேட்கவில்லை