பக்கம் எண் :

174என் சரித்திரம்

அன்றே நான் பாரதியாரிடம் சங்கீத அப்பியாசத்தைத் தொடங்கினேன்.
அது முதல் பெரும்பாலும் தினந்தோறும் விடியற் காலையில் பாரதியாரிடம்
போய் வரலானேன். சில நாட்களில் மாலை வேளைகளில் செல்வதும் உண்டு;
பிற்பகலில் அவரோடு காவேரித் துறையாகிய துலாக்கட்டத்துக்குச் சென்று
சந்தியாவந்தனம் செய்து வருவேன். துலாக்கட்டத்தில் அக்காலத்தில் முன்சீப்
கச்சேரி இருந்தது மாயூரம் முன்சீபாக வேதநாயகம் பிள்ளை உத்தியோகம்
பார்த்து வந்தார். அவர் தமிழ் வித்துவானென்று நான் கேட்டிருந்தேன்.
தூரத்தில் இருந்தபடியே அவர் கச்சேரி பண்ணுவதை நான் சில சமயங்களில்
கவனிப்பேன்.

பாரதியாரோடு பழகப் பழக அவர் பெரிய மகானென்ற எண்ணம்
எனக்கு உண்டாயிற்று. அவர் சாரீரம் கம்மலாக இருந்தது. அதனால் அவர் சில
வருஷங்களாகப் பிடில் வாத்தியத்தைப் பயின்று தனியே இருக்கும் நேரங்களில்
அதை வாசித்துப் பொழுது போக்கி வந்தார். காலை வேளைகளிலும் மாலை
வேளைகளிலும் மாயூரநாதர் கோயிலிலுள்ள அகஸ்தீசுவர ஸ்வாமி சந்நிதியில்
நெடுநேரம் யோகம் செய்து கொண்டேயிருப்பார்.

வேடிக்கையாகப் பேசுவதிலும் கதைகள் சொல்லுவதிலும் அவர் வெகு
சமர்த்தர். ஏதாவது ஒரு வார்த்தை சொன்னால் அந்த வார்த்தையோடு ஒரு
புராண கதையைச் சம்பந்தப்படுத்திச் சொல்வார். பொழுது போவதே தெரியாது.
பேசும்போது அடிக்கொரு தரம் பழமொழிகள் அவர் வாக்கிலிருந்து வரும்.

அவரிடம் நான் பல கீர்த்தனங்களைக் கற்றுக் கொண்டேன். அவர்
இயற்றிய கீர்த்தனங்கள் பலவற்றைத் தெரிந்து கொண்டேன். நந்தனார்
சரித்திரக் கீர்த்தனங்களுக்கு உரிய மெட்டையும் ராகதாளங்களையும் அவர்
சொல்லிக் காட்டினார். சில சமயங்களில் அவர் மாணாக்கராகிய இராமசாமி
ஐயரும் எனக்குக் கீர்த்தனங்களைச் சொல்லித் தருவார்.

அவ்வூரிலும் அயலூரிலும் இருந்த சங்கீத வித்துவான்கள் பாரதியாரை
அடிக்கடி பார்க்க வருவார்கள். மாயூரத்தில் சாத்தனூர்ப் பஞ்சுவையர், கோட்டு
வாத்தியம் கிருஷ்ணையர், திருத்துறைப் பூண்டி பாகவதர், பெரிய இராமசாமி
ஐயர் முதலிய சங்கீத வித்துவான்கள் இருந்தனர். வேதநாயகம் பிள்ளை
முன்சீபாக இருந்தமையால் அவரிடம் உத்தியோகம் பார்த்த குமாஸ்தாக்களும்,
வக்கீல்களும், அவருடைய பிரியத்தைப் பெறும் பொருட்டு அவர்