“அப்படியா! அந்தக் கீர்த்தனங்களைக் கேட்டு எவ்வளவோ நாளாகி விட்டது. எங்கே ’குஸூமகுந்தளாம்பிகையே’ என்ற கீர்த்தனத்தைப் பாடப்பா; கேட்கலாம்” என்று பாரதியார் என்னைப் பார்த்துச் சொன்னார். நான் அதைப் பாடினேன். “நல்லது; பையனுக்குச் சாரீரம் இருக்கிறது. இதை வீண் பண்ணிவிடக் கூடாது. மேலும் மேலும் அப்பியாசம் செய்து வர வேண்டும்” என்று சொல்லி விட்டு வேறு சில கீர்த்தனங்களையும் பாடும்படி சொன்னார். நான் பாடினேன். என் தகப்பனாரும் சில கீர்த்தனங்கள் பாடினார். நாங்கள் இருவரும் சேர்ந்து சிலவற்றைப் பாடினோம். “இந்த மாதிரி கீர்த்தனங்களை இங்கே யார் பாடுகிறார்கள்? இந்தப் பிள்ளை இவ்வளவு நன்றாகப் பாடுவதைக் கேட்க எனக்குச் சந்தோஷமாக இருக்கிறது.” “எல்லாம் உங்களைப் போன்ற பெரியவர்கள் ஆசீர்வாதம் தான். இவனை இங்கேயே விட்டு விட்டுப் போகலாமென்று எண்ணி வந்திருக்கிறேன். தாங்கள் இவனுக்குச் சங்கீத அப்பியாசம் செய்து வைக்க வேண்டும்” என்று என் தகப்பனார் பாரதியாரைக் கேட்டுக் கொண்டார். “அதற்கு என்ன தடை? எனக்கும் பொழுது போகும்” என்று அவர் சம்மதித்தார். என் தந்தையாரும் பாரதியாரும் பழைய சமாசாரங்களைப் பற்றி வெகுநேரம் பேசிக் கொண்டிருந்தனர். அப்பேச்சினால் பாரதியார் கனம் கிருஷ்ணையர் கீர்த்தனங்களில் எவ்வளவு விருப்பமுடையவரென்பது தெரிந்தது. பின்பு ஜாகைக்கு வந்து பார்ப்பதாக என் தந்தையார் சொல்லவே பாரதியார் விடை பெற்றுச் சென்றார். பாரதியாரிடம் சங்கீத அப்பியாசம் செய்தது மறுநாள் விடியற் காலையிலேயே நானும் என் தந்தையாரும் பாரதியார் தங்கியிருந்த ஜாகைக்குச் சென்றோம், அவர் அக்காலத்தில் தம் மாணாக்கராகிய இராமசாமி ஐயருடைய வீட்டில் வசித்து வந்தார். இராமசாமி ஐயர் மாயூரநாத ஸ்வாமி ஆலயத்தில் கைங்கரியம் செய்வார். -------------------------------------------------------------------------------------------------------------------------------------------- இக் கீர்த்தனம் உடையார்பாளையம் சிவாலயத்திலுள்ள அம்பிகை விஷயமானது. |