பக்கம் எண் :

172என் சரித்திரம்

எழுந்து, “பாரதியாரவர்களா?” என்று கேட்டுக்கொண்டே திண்ணையை
விட்டு இறங்கினார். அக்கிழவர், என் தந்தையாரைப் பார்த்து விட்டு, “யார்?
வேங்கட சுப்பையரா? ஏது இவ்வளவு தூரம்?” என்று கூறியவாறே நாங்கள்
இருந்த திண்ணையில் வந்து உட்கார்ந்தார். என் தந்தையார் அந்த முதியவரை
நமஸ்கரிக்கும்படி கூறவே நான் வணங்கிவிட்டு நின்றேன்.

“இந்தப் பிள்ளையாண்டான் யார்?” என்று பாரதியார் கேட்டார்.

“இவன் என் குமாரன்.”

“என்ன செய்து கொண்டிருக்கிறான்? சங்கீதம் அப்பியாசம் செய்து
வருகிறானா?”

“செய்து வருகிறான். தமிழ் படித்தும் வருகிறான். இங்கே மகா வித்வான்
மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடம் படிக்கச் செய்யலாமென்று
வந்திருக்கிறேன்.”

“அப்படியா? சந்தோஷம். மீனாட்சி சுந்தரம் பிள்ளை நல்ல வித்துவான்.
நல்ல குணசாலி, உபகாரி, சிறந்த கவி. ஆனால் அவர் சங்கீத விரோதி. சங்கீத
வித்துவானென்றால் அவருக்குப் பிரியமிருப்பதில்லை.”

இந்த விஷயத்தைப் பாரதியார் சொன்னபோது நான் அதை
நம்பவில்லை. பாரதியாருடைய அழகற்ற உருவத்தைப் பார்த்து நான்
வியப்படைந்தேன். அவருடைய கோணலான உடம்புக்கும் அவருடைய
புகழுக்கும் சம்பந்தமே இல்லை என்பதை அன்றுதான் உணர்ந்தேன்.
“நந்தனார் சரித்திரத்தை இவரா இயற்றினார்?” என்றுகூட நான் நினைத்தேன்.
அச்சரித்திரத்தில் இருந்த மதிப்பு அவரைப் பார்த்தபோது அவர்பால்
உண்டாகவில்லை. கவர்ச்சியே இல்லாத அவரது தோற்றமும் அவர் கூறிய
வார்த்தையும் என் மனத்தில் திருப்தியை உண்டாக்கவில்லை. ஆயினும் என்
தகப்பனார் அவரிடம் காட்டிய மரியாதையைக் கண்டு நானும் பணிவாக
இருந்தேன்.

“இவனுக்குச் சங்கீதத்தில் எந்த மட்டும் அப்பியாஸம் செய்து
வைத்திருக்கிறீர்கள்? கனம் கிருஷ்ணையர் கீர்த்தனங்கள் வருமா?”

“எனக்குத் தெரிந்த மட்டிலும் சொல்லி வைத்திருக்கிறேன். கனம்
கிருஷ்ணையர் கீர்த்தனங்களில் எனக்குத் தெரிந்தவைகளிற் சிலவற்றை இவனும்
பாடுவான்.”