பக்கம் எண் :

218என் சரித்திரம்

மென்று நாங்களெல்லாம் காத்திருக்கிறோம்; ஐயா இங்கே வந்து
விட்டது எங்கள் அதிர்ஷ்டந்தான்” என்று சொல்லிக் குதூகலம்
அடைந்தார்கள்.

தம்பிரான்களுடைய தோற்றத்தைக் கண்டு நான் விம்மித மடைந்தேன்.
“இவ்வளவு நீண்ட சடை இவர்களுக்கு எப்படி வந்தது?” என்று பிரமித்தேன்.
அவர்கள் அணிந்திருந்த உடையின் அழகும், சடையின்மேல் போட்டிருந்த
வஸ்திரத்தின் அமைப்பும், காதில் உள்ள வேடமும், ருத்திராக்ஷமும் விபூதி
அணிந்த பளபளப்பான மேனியின் வனப்பும் கண்கொள்ளாக் காட்சியாக
இருந்தன. அவர்கள் பூண்டிருந்த உடையும் சிவ சின்னங்களும் அலங்காரமான
ஆடைகளையும் ஆபரணங்களையும் விஞ்சி நின்றன.

பிள்ளையவர்கள் ஸ்நானம் செய்துவிட்டுப் பூஜைக்குச் சென்றார்கள்.
குளப்புரைக்கு வடக்கே பூஜை செய்வதற்காகவே ஓர் இடம் உண்டு. பூஜை
மடம் என்று அதைச் சொல்வார்கள். குளத்தின் மேல் புறத்திலும் பூஜை மடம்
உண்டு அங்கே பெரிய தம்பிரான்களிற் சிலர் மிக்க நியமத்தோடு மௌனமாகப்
பூஜை செய்துகொண்டிருந்தனர். அவர்களுக்கு அருகில் தவசிப் பிள்ளைகள் ஈர
ஆடையை உடுத்தபடியே பூஜைக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்தனர்.
மல்லிகை முல்லை முதலிய மலர்களையும் வில்வம் முதலிய பத்திரங்களையும்
தனித்தனியே வகைப்படுத்தி வெள்ளித் தட்டுகளில் வைத்து உதவினர்.

பூஜை செய்த தம்பிரான்கள் புறப்பட்டனர். சிலர் ஸ்நானம்
செய்துவிட்டுப் பூஜை செய்ய வந்தனர். அங்கே நிருமாலியங்கள் கால் படாத
தொட்டி ஒன்றில் குவிக்கப்பட்டிருந்தன.

என் தந்தையாரும் பாட்டனாரும் சிவபூஜை செய்வதை நான்
பார்த்துள்ளேன். அதனால் சிவபூஜையென்றால் என் மனத்தே ஒரு பக்தியும்
சாந்த உணர்ச்சியும் உண்டாகும். அவர்கள் பூஜையில் இவ்வளவு சாதனங்கள்
இல்லை; சாதகர்களும் இல்லை; இங்கே பூஜைமடம் முழுவதும் பூஜை
செய்பவர்களது கூட்டமாக இருந்தது. பூஜைக்குரிய திரவியங்கள் குறைவின்றி
இருந்தன. அந்த இடம் முழுவதும் சிவபூஜைக் காட்சியால் நிரம்பியிருந்தது.

சைவ ஆதீனமாகிய அவ்விடத்தை, ‘சிவ ராஜதானி’ யென்று
கொண்டாடுவர். அங்கே ஆதீனகர்த்தராக இருப்போர் சைவத் துறவிகளுக்கு
அரசர். அந்த அரசின் ஆட்சியின்கீழ் வாழும் தம்பிரான்கள் சைவக் கோலம்
பூண்ட ஞான வீரர்கள். அவர்களுக்குச் சிவவூஜை செய்வதும் குரு கைங்கரியம்
செய்வதும் நல்ல