பக்கம் எண் :

எல்லாம் புதுமை 219

நூல்களைப் படிப்பதுமே உத்தியோகங்கள் தம்பிரான்கள் தம் கடமையை
நன்கு உணர்ந்து அந்தச் சிவராஜதானியில் ஒழுங்காகப் பூஜை முதலியவற்றை
மிக்க சந்தோஷத்துடன் தவறாமல் செய்து வந்தனர். அவை அவர்கள்
நாள்தோறும் செய்யும் வேலைகள். இந்த அமைப்புக்களை நூதனமாகப் பார்த்த
எனக்கு எல்லாம் புதுமையாக இருந்தன; அமைதியான இன்பத்தை
விளைவித்தன. ‘திருவாவடுதுறை, திருவாவடுதுறை’ என்று அடிக்கொரு தரம்
என் ஆசிரியரும் அவரைப் பார்க்க வருவோரும் சொல்லிப் பாராட்டுவதன்
காரணத்தை நான் அப்போது நன்றாக உணர்ந்தேன்.

என் கண்களை அவற்றின் போக்கிலே விட்டு விட்டு ஆச்சரியத்தால்
ஸ்தம்பித்து நின்ற என்னிடம் ஒருவர் வந்தார். “ஏன் இங்கே நின்றபடியே
இருக்கிறீர்?” என்று அவர் வினவினார். “இக்காட்சிகள் எங்கும் காணாத
புதுமையாக இருக்கின்றன. இவற்றைப் பார்க்கும் போது எனக்கு வேறிடம்
போகவே கால் எழும்பவில்லை” என்றேன்.

“இதுதானா ஆச்சரியம்? நீர் திருவாவடுதுறைக்கு வந்ததே
இல்லைபோலிருக்கிறது. மேல்பக்கத்துள்ள அபிஷேகக் கட்டளை மடத்துக்குப்
போய்ப்பாரும்; வடக்கு மடத்தைப் பார்த்தால் நீர் மயங்கிவிடுவீர்; அதற்குப்
பின்னே உள்ள குளப்புரையிலும் இந்த மாதிரியான காட்சிகளைக் காணலாம்.
இன்னும் மறைஞான தேசிகர் கோவில், காவிரிப் படித்துறை, நந்தவனங்கள்
முதலிய இடங்களைப் பார்த்தால் எவ்வளவு ஆச்சரியப்படுவீரோ தெரியாது”
என்று அவர் மிகவும் சாதாரணமாக அடுக்கிக்கொண்டே போனார். “ஏது! நாம்
பூலோகத்தை விட்டுவிட்டுச் சிவலோகத்தின் ஒரு பகுதிக்கு வந்து
விட்டோமென்று தோற்றுகிறதே” என்று எண்ணும் படி இருந்தது அவர் பேசின
பேச்சு.

“இந்த உலகத்தில்தான் இருக்கிறோம். நாமும் ஸ்நானம் செய்ய
வேண்டும்; போஜனம் செய்யவேண்டும்” என்பதை அப்போது எனக்கு
உண்டான சிறிய பசி உணர்த்தியது. “இனிமேல் இங்கேயே இருக்கும்
சந்தர்ப்பந்தான் வரப்போகிறதே; அப்போது இவர் சொன்ன அவ்வளவு
இடங்களையும் பார்க்காமலா விடப் போகிறோம்?” என்ற சமாதானத்தோடு
நான் ஸ்நானம் செய்யச் சென்றேன். பிள்ளையவர்கள் ஸ்நானம் முதலியவற்றை
முடித்துக் கொண்டு மடத்துக்குச் சபாபதியின் தரிசனத்துக்குச் சென்றார்கள்.

விருந்தும் ஆசீர்வாதமும்

ஸ்நானம் ஆனபிறகு நான் நியமங்களை நிறைவேற்றினேன். என்னை
ஒரு பிராமணக் காரியஸ்தர் ஆகாரம் செய்யவேண்டிய