பக்கம் எண் :

220என் சரித்திரம்

இடத்திற்கு அழைத்துச் சென்றார். பிராமணர்கள் உண்பதற்குரிய
சத்திரம் அது. அது சிவாலயத்துக்கு முன் உள்ள திருக்குளத்தின்
தென்கரையில் அமைந்த விசாலமான கட்டிடம். அவ்விடத்தில் பலர் கூடிப்
பேசிக்கொண்டு மகிழ்ச்சியோடிருந்தனர். அவர்கள் பேச்சு வீண் பேச்சாக
இல்லை. சிலர் ஸம்ஸ்கிருத சுலோகங்களைச் சொல்லி அர்த்தம்
சொல்லிக்கொண்டிருந்தனர். சிலர் சில கீர்த்தனங்களைப் பாடியபடி இருந்தனர்.
சிலர் தமிழ்ப்பாடல்களைச் சொன்னார்கள் அவர்களுடைய செயல்களால்
அங்கிருந்தவர்களில் சிலர் ஸம்ஸ்கிருத வித்துவான்கள், சிலர் சங்கீத
வித்துவான்கள், சிலர் தமிழ்ப் பண்டிதர்கள் என்று அறிந்தேன். இடையிடையே
அவர்கள் சுப்பிரமணிய தேசிகரைப் பாராட்டினர்.

நான் அங்கே சென்றவுடன் ஒருவர் என்னை அழைத்தார்.
“பிள்ளையவர்களுடன் வந்திருக்கிறவரல்லவா நீர்? காலையில் சந்நிதானத்துக்கு
முன் பாடல் சொன்னீரே; நாங்களெல்லாம் கேட்டுச் சந்தோஷித்தோம்”
என்றார். அருகில் இருந்த சிலர் நகர்ந்து என்னிடம் வந்தார்கள். “பாட்டுச்
சொன்னபோது பைரவி ராகம் சுத்தமாக இருந்தது; அபஸ்வரம் இல்லை.
சந்நிதானம் அதைக் கவனித்துச் சந்தோஷித்தது” என்றார் ஒருவர். அவர்
சங்கீத வித்துவானாக இருக்கவேண்டுமென்று நான் ஊகித்தேன். “உமக்கு யார்
சங்கீத அப்பியாசம் செய்து வைத்தார்கள்?” என்று வேறொருவர் கேட்டார்.
“என் தகப்பனார்” என்று நான் சொன்னேன். “அப்படிச் சொல்லும், பரம்பரை
வித்தை. அதுதான் சக்கை போடு போடுகிறீர்” என்று அவர் தம் துடையைத்
தட்டிக் கொண்டே சொன்னார்.

“நீர் பிள்ளையவர்களிடம் வந்து எவ்வளவு காலம் ஆயிற்று?” என்று
மற்றொருவர் கேட்டார்.

“நாலைந்து மாச காலந்தான் ஆயிற்று” என்றேன்.

“நீர் அதிர்ஷ்டசாலிதான். பிள்ளையவர்களுக்கு உம்மிடம் அதிகப்
பிரியம் இருப்பதாகத் தெரிகிறது. அதோடு சந்நிதானத்துக்கும் உம்மைப்பற்றித்
திருப்தி ஏற்பட்டிருக்கிறது உமக்கு இனிமேல் குறையே இல்லை” என்றார்
பின்னொருவர். “வித்தியாதானத்தில் சிறந்த தாதா அந்த மகா கவி
அன்னதானத்திலும் சொன்ன தானத்திலும் சிறந்த தாதா இந்த மகா புருஷர்
இரண்டு பேருடைய பிரியத்துக்கும் பாத்திரரான உமக்கு இனிமேல் வேறு
பாக்கியம் என்ன இருக்கிறது?” என்றார் இன்னுமொருவர். இப்படி
ஒவ்வொருவரும் உத்ஸாகத்தோடு பேசத் தொடங்கினர். நான் நாணத்தோடு
தலை கவிழ்ந்து கொண்டே கேட்டு வந்தேன்.