இலை போட்டதும் இனிய உணவை உண்டு பசி யாறினேன். பின்பு அங்கிருந்த வித்துவான்கள் என்னைச் சில பாடல்கள் சொல்லும்படி கேட்டனர். நான் சொல்லிக் காட்டினேன். அவர்கள் கேட்டு மகிழ்ந்து ஆசீர்வாதம் செய்தார்கள். அத்தியாயம்-37 எனக்குக் கிடைத்த பரிசு பல வித்துவான்கள் நிறைந்த கூட்டத்தில் இருந்து பழகாத எனக்குத் திருவாவடுதுறைச் சத்திரத்தில் வித்துவான்கள் கூடிப் பேசி வந்த வார்த்தைகளும் இடையிடையே பல நூல்களிலிருந்து சுலோகங்களைச் சொல்லிச் செய்த வியாக்கியானமும் ஆனந்தத்தை விளைவித்தன சங்கீத வித்துவான்கள் என்னைப் பாராட்டியபொழுது, “சங்கீத அப்பியாசத்தை நாம் விட்டது பிழை” என்று கூட எண்ணினேன். ஆனால் அந்த எண்ணம் நெடுநேரம் நிற்கவில்லை இவ்வாறு பேசிக்கொண்டும் வித்துவான்களுடைய பேச்சைக் கேட்டுக்கொண்டுமிருந்தபோது மடத்திலிருந்து ஒருவர் வந்து என்னை மடத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கே ஒடுக்கத்தின் மேல் மெத்தையில் ஒரிடத்தில் சுப்பிரமணிய தேசிகர் வீற்றிருந்தார் அவர் அருகே பிள்ளையவர்களும் சில தம்பிரான்களும் அமர்ந்திருந்தனர். நான் அங்கே சென்றவுடன் சுப்பிரமணிய தேசிகர், “போஜனம் செய்தீரா?” என்று அன்புடன் வினவி உட்காரச் சொன்னார். நான் பிள்ளையவர்களுக்குப் பின்னே உட்கார்ந்தேன். அப்போது அங்கிருந்த தம்பிரான்கள் தங்கள் கைகளில் புஸ்தகங்களை வைத்திருந்தனர். அதைக் கவனித்த நான், “பிள்ளையவர்கள் பாடஞ் சொல்ல ஆரம்பித்து விட்டார்களோ?” என்று எண்ணி, “நாம் முன்பே வந்து கவனிக்கவில்லையே” என்று வருந்தினேன். சந்தேகம் தெளிதல் அங்கிருந்த தம்பிரான்கள் எழுத்திலக்கணம் முதலியவற்றைச் சுப்பிரமணிய தேசிகரவர்களிடம் பாடங் கேட்டு முடித்தவர்கள் அந்நூல்களில் இடையிடையேயுள்ள உதாரணச் செய்யுட்களுள் சிலவற்றின் பொருள் தம்பிரான்களுக்கு விளங்கவில்லை. தேசிகர் பாடஞ் சொல்லும் பொழுது அத்தகைய இடங்கள் வந்தால், “பிள்ளையவர்கள் வரும்பொழுது கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்; |