பக்கம் எண் :

222என் சரித்திரம்

ஞாபகப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்” என்று சொல்லுவது
வழக்கமாம். அச்சமயத்தில் தேசிகருடைய கட்டளையின்படியே தம்பிரான்கள்
பிள்ளையவர்களிடம் சந்தேகங்களைக் கேட்டு வந்தனர். பிள்ளையவர்கள்
தட்டின்றி ஒவ்வொரு கேள்விக்கும் தெளிவாக விடையளித்தனர். தம்பிரான்கள்
மிகவும் ஆவலாகச் சந்தேகங்களைக் கேட்டனர். பிள்ளையவர்கள்
பொருள்களை விளக்கும் பொழுது தம்பிரான்களைக் காட்டிலும் அதிக
ஆவலாகச் சுப்பிரமணிய தேசிகர் கவனித்து வந்தார். சில சமயங்களில்
தேசிகரே சந்தேகங்களுள்ள இடங்களைத் தம்பிரான்களுக்கு ஞாபக மூட்டினர்.

அந்த நிகழ்ச்சியை நான் கவனித்த பொழுது எனக்குப் பல புதிய
செய்திகள் தெரிய வந்தன. பிள்ளையவர்கள் விளக்கிக் கூறும் செய்திகள்
மட்டுமல்ல; ஆதீனத்துச் சம்பிரதாயங்களையும் அறிந்து கொண்டேன்.
தம்பிரான்கள் கேட்ட சந்தேகங்கள் சுப்பிரமணிய தேசிகருக்கும்
விளங்காதனவே. ஆயினும் ஞானாசிரியராகிய அவர் நேரே
பிள்ளையவர்களிடம் ஒரு மாணாக்கரைப் போலச் சந்தேகம் கேட்கவில்லை.
தம்பிரான்களைக் கேட்கச் சொல்லித் தாம் அறிந்து கொண்டார்; அவர்களையும்
அறிந்துகொள்ளச் செய்தார். அச்சந்தேகங்களைத் தெளிந்து கொள்ள
வேண்டுமென்ற ஆவல் தேசிகருக்குத் தீவிரமாக இருந்ததையும் நான்
அறிந்தேன். இல்லையென்றால் பிள்ளையவர்களிடம் தம்பிரான்களை அனுப்பிச்
சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ளச் சொல்லியிருக்கலாமல்லவா?
பிள்ளையவர்கள் அவற்றை விளக்கும்போது தாமே நேரிலிருந்து கேட்க
வேண்டுமென்பது அவரது ஆசை. அவர் ஞானாசிரியராகவும் பிள்ளையவர்கள்
அவருடைய சிஷ்யராகவும் இருந்தனரென்பதில் ஐயமில்லை. ஆயினும்
அச்சமயத்தில் தம் ஞானாசிரிய நிலையையும் ஆதீனத் தலைமையையும் பிற
சிறப்புக்களையும் மறந்து தேசிகர் என் ஆசிரியர் கூறியவற்றைக் கவனித்து
வந்தார். அன்று காலையில் என் ஆசிரியர் தேசிகரைப் பணிந்த காட்சி
தவத்தின் தலைமையை நினைவுறுத்தியது; பிற்பகலில் அப்புலவர் கோமான்
தேசிகருக்கு முன் சந்தேகங்களை விளக்கிய காட்சி புலமையின் தலைமையைப்
புலப்படுத்தியது.

தம்பிரான்கள் ஒவ்வொரு சந்தேகமாகக் கேட்டு வந்தார்கள். சில
சந்தேகங்கள் மிகவும் கடினமானவை. அப்பகுதிகளைப் பிள்ளையவர்கள்
தெளிவிக்கும்பொழுது சுப்பிரமணிய தேசிகர் கூர்ந்து கவனிப்பார். அவருக்கு
விஷயம் விளங்கினவுடன், “நன்றாயிருக்கிறது; மிகவும் பொருத்தமாயிருக்கிறது”
என்று பாராட்டுவார். அவருடைய சந்தோஷம் உச்ச நிலையை அடையும்
பொழுது, “நல்லதையா!” என்ற வார்த்தைகள் வெளிவரும்.