பக்கம் எண் :

232என் சரித்திரம்

பள்ளியில் துப்பலாமா? உடனே எழுந்திருந்து வெளியே வந்து
துப்புவதும் சுலபமன்று. பல இடங்களைத் தாண்டிக்கொண்டு ஆலயத்துக்கு
வெளியே வரவேண்டும்.

புளியோரையென்று அவர் சொன்ன பிரசாதத்தை ஒருவாறு கடித்து
மென்று விழுங்கினேன். அடுத்தபடியாக அவர் சர்க்கரைப் பொங்கலை
அளித்தார். அதில் தீசல் நாற்றமும் சிறிது வெல்லப் பசையும் இருந்தன. வாயில்
இடுவதற்கு முன் வெளியே வந்து விடும்போல் தோற்றியது. பிறகு வெண்
பொங்கல் கிடைத்தது. அதில் இருந்த உமியையும் கல்லையும் மென்று
விழுங்குவதற்கே அரை மணி நேரம் ஆகிவிட்டது. என் பசி இருந்த இடம்
தெரியாமல் ஒளிந்து கொண்டது. கண்ணையும் காதையும் கவர்ந்த
அப்பிரசாதங்கள் ஸ்வாமிக்கு நிவேதனம் செய்வதற்கு மாத்திரம் ஏற்றவையாக
இருந்தன. ஜனங்கள் வீண் சபலப்பட்டு அவற்றை உண்ணப் புகுவது
சரியன்றென்பதை வற்புறுத்தின. தேங்குழலும், அதிரசமும், வடையும்
ஒருவிதமாகத் தங்கள் பெயர்களைக் காப்பாற்றிக் கொண்டிருந்தன. மற்றப்
பிரசாதங்களை நோக்க அவை சிலாக்கியமாகப் பட்டன. அவற்றில் சிலவற்றை
வயிற்றுக்குள் செலுத்தி விட்டுக் கையைச் சுத்தம் செய்து கொண்டு எழுந்தேன்.

‘ஒரு வரம் கொடுங்கள்’

இருட்டில் தட்டுத் தடுமாறி வந்தபோது என் காலில் ஜில்லென்று ஏதோ
ஒரு வஸ்து தட்டுப்பட்து. கயிறோ, பாம்போ அல்லது வேறு பிராணியோ என்று
திடுக்கிட்டுப் பயந்து காலை உதறினேன். “இங்கே வெளிச்சம் கொண்டு
வாருங்கள்” என்று கத்தினேன். ஒருவர் விளக்கை எடுத்து வந்தார். காலின் கீழ்
நோக்கினேன்; ஆச்சரியத்தில் மூழ்கி விட்டேன்.

என்னை அழைத்து வந்த காரியஸ்தர் என் காலைப் பிடித்துக் கொண்டு
நமஸ்காரம் பண்ணியபடியே கிடந்தார். ஈரமுள்ள அவர் கை எதிர்பாராதபடி
என் காலிற் பட்டதுதான் என் பயத்துக்குக் காரணம்.

காரியஸ்தருக்கு அறுபது பிராயத்துக்கு மேலிருக்கும். அவர் என்னை
வணங்கியதற்குக் காரணம் இன்னதென்று விளங்கவில்லை. “இதுவும் ஒரு
சம்பிரதாயமோ?” என்று நான் சந்தேகப்பட்டேன்.

“ஏன் ஐயா இப்படிப் பண்ணுகிறீர்?” என்று படபடப்புடன் கேட்டேன்.