பக்கம் எண் :

238என் சரித்திரம்

என் ஆசிரியர் அப்போது செட்டியாரை நோக்கி, “என்ன அப்படிக்
கேட்கிறாய்? நீ அந்த அந்தாதி பாடம் கேட்டதில்லையா?” என்று வினவினார்.

“நான் கேட்டதில்லை. நீங்கள் திருவாவடுதுறைக்குப் போன பிறகு
இயற்றியதல்லவா அது? நான் கும்பகோணம் வந்த பிறகு நீங்கள் இயற்றிய
நூல்களைப் பாடங் கேட்டதில்லை. ஆனாலும் அவற்றைப் படித்துப் பார்த்து
இன்புற்றுப் பாடமும் சொல்லி வருகிறேன். நீங்கள் திருவாவடுதுறைக்குப் போன
பிறகு செய்த நூல்களுக்கும் அதற்கு முன்பு செய்தவற்றிற்கும் எவ்வளவோ
வித்தியாசம் இருக்கிறது. முன்பு பாடின பாடல்களில் சாஸ்திரக் கருத்துக்கள்
அதிகமாக இல்லை. இப்போது பாடியுள்ள பாடல்களில் எவ்வளவோ அரிய
கருத்துக்களும் சாஸ்திர விஷயங்களும் அமைந்துள்ளன. அவற்றைப் படித்துப்
பார்க்கும்போது சிலவற்றிற்குப் பொருள் விளங்குவதே இல்லை எவனாவது ஒரு
புஸ்தகத்தை எடுத்து வந்து பாடஞ் சொல்ல வேண்டும் என்றால் விழிக்க
வேண்டியிருக்கிறது. இந்த அந்தாதியிலுள்ள யமகத்துக்கு லேசில் அர்த்தம்
புரியுமா? உங்களிடம் வந்து கேட்டால்தான் விளங்கும். சில மாதங்களுக்கு
முன்பு திருச்சிராப்பள்ளியிலிருந்து சதாசிவம் பிள்ளை வந்தான். இந்தத்
துறைசையந்தாதியை அவன் எடுத்து வந்து பாடம் சொல்லும்படி தொந்தரவு
செய்தான். நான் படித்துப் பார்த்தேன்; ஒன்றுமே விளங்கவில்லை. ‘ஐயா
அவர்களிடத்திலேயே போய்க் கேட்டுக் கொள்’ என்று அனுப்பிவிட்டேன்.
அங்கே தங்களிடம் வந்திருப்பானே?”

“வரவில்லை”

“அவனைப் போல இன்னும் யாராவது வந்து அர்த்தம் சொல்ல
வேண்டுமென்று உபத்திரவம் பண்ணினால் இவரிடம் தள்ளிவிடலாமே என்ற
எண்ணத்தினாலேதான் இந்தக் கேள்வி கேட்டேன்.”

‘ஆற்றிலே போட்டுவிடுங்கள்’

அப்போது ஆறுமுகத்தா பிள்ளை செட்டியாரை நோக்கி, “நீங்கள் ஐயா
முன்பு செய்த நூல்களெல்லாம் கேட்டிருக்கிறீர்களோ? ஐயா இளமைக்
காலத்தில் பட்டீச்சுரத்திற்கு ஒரு பதிற்றுப் பத்தந்தாதி செய்திருக்கிறார்கள்.
அதைப் படித்திருக்கிறீர்களா?” என்று கேட்டார்.