பக்கம் எண் :

யான் பெற்ற நல்லுரை 237

எண்ணினார். ஆதலின், “எங்கேயாவது ஓரிடத்தில் உட்கார்ந்து
கொள்ளலாமே; நடந்துகொண்டே கேட்பதைவிட ஓரிடத்தில் இருந்தால்
அவரும் பாடல்கள் சொல்லிக் காட்ட அனுகூலமாயிருக்கும்” என்று
செட்டியாரைப் பார்த்துச் சொன்னார்.

நாங்கள் கும்பேசுவரர் கோயிலுக்கு அருகில் அப்போது நடந்து
வந்தோம். ஆதலின் அக்கோயிலின் மேற்கு வாசல் வழியே உள்ளே சென்று
புறத்தே ஸ்ரீ சுப்பிரமணிய மூர்த்தி ஆலயத்தின் முன்மண்டபத்தில் என்
ஆசிரியர் அமர்ந்தார்; நாங்களும் உட்கார்ந்தோம்.

செட்டியார், “ஏதாவது பாடல் சொல்லி அர்த்தமும் சொல்லும்” என்றார்.
இத்தகைய சந்தர்ப்பங்களில் பாடல் சொல்வதும் பொருள் சொல்வதும் எனக்கு
வழக்கமாயிருந்தன. நான் துறைசையந்தாதியிலிருந்து, “அண்ணா
மலையத்தனை” என்று தொடங்கும் பாடலை ராகத்தோடு சொல்லி அர்த்தமும்
சொன்னேன். நான் இசையோடு சொன்னதை அவர் அவ்வளவாகக்
கவனிக்கவில்லை.

செட்டியார் கேட்கக் கேட்க மேலும் மேலும் வேறு பிரபந்தங்களிலிருந்து
செய்யுட்களைச் சொல்லி வந்தேன் செட்டியார் கேட்டுத்
திருப்தியடைந்தாரென்றே எண்ணினேன். திருப்தியை அவர் வெளிப்படையாகக்
காட்டவில்லை.

’பாடம் சொல்லுவீரா?’

“துறைசையந்தாதிப் பாட்டுச் சொன்னீரே; அந்நூல் முழுவதும் நன்றாகத்
தெரியுமா?”

“ஏதோ ஒருவாறு தெரியும்.”

“அதைப் பாடம் சொல்லுவீரா?”

அக்கேள்வி என்னைப் பிரமிக்கச் செய்தது. துறைசையந்தாதி
யமகமாதலால் கடினமானது. ஆதலின் அதை முற்றுமறிந்து தாரணம்
செய்துகொள்வது அருமை. அவ்விஷயத்தைச் செட்டியார் உணர்ந்தவர்.
ஆயினும் அவரது கருத்து எனக்குச் சரியாக விளங்கவில்லை.

“பாடம் யாருக்குச் சொல்வது? இவருக்கா? பாடம் சொல்லுவேன் என்று
சொன்னால் கர்வமுள்ளவனென்று எண்ணிக் கொள்வாரோ என்னவோ!” என்று
நான் யோசிக்கலானேன். அதனால் நான் ஒன்றும் பதிலே சொல்லவில்லை.