பக்கம் எண் :

236என் சரித்திரம்

பலம் பொருந்திய தேகக் கட்டு. அவர் நடையில் கம்பீரமும்
பார்வையில் தைரியமும் பேச்சில் துணிவும் புலப்பட்டன. அவர் இடையில்
தோய்த்துலர்ந்த ஒரு துண்டை உடுத்திருந்தார். யாரையும் அவர் லக்ஷியம்
செய்ய மாட்டாரென்றும் மிக்க கண்டவாதியென்றும் முன்பு நான்
கேள்வியுற்றிருந்தேன்; அதற்கு ஏற்ற படியே அவர் நடையும் பேச்சும்
இருந்தன. அவர் பிள்ளை யவர்கள் முன் பணிந்து எழுந்தபோது, அவ்வளவு
தைரியத்திலும் அலக்ஷியத்திலும் இடையே அப்பணிவு நன்றாக வெளிப்பட்டது.

செட்டியார் எங்களுடன் வந்திருந்த பஞ்சநதம் பிள்ளையைப் பார்த்து,
“சீக்கிரம் சமையலுக்கு ஏற்பாடு செய்யும்” என்று சொன்னார். அப்போது
பிள்ளையவர்கள் இடைமறித்து, “நாங்கள் ஆகாரத்திற்குப் பட்டீச்சுரம்
போவதாக எண்ணியிருக்கிறோம்” என்று சொல்லிவிட்டு என்னைச்
சுட்டிக்காட்டி, “இவர் காலையில் ஏதேனும் சாப்பிடுவது வழக்கம். இவருக்கு
எங்கேனும் ஆகாரம் பண்ணுவித்தாற் போதும்” என்றார். செட்டியார் உடனே
என்னைத் தமக்குத் தெரிந்த ராகவாசாரியார் என்பவர் வீட்டிற்கு அனுப்பி
ஆகாரம் செய்யச் சொன்னார். நான் ஆகாரம் செய்து வந்தவுடன் செட்டியார்,
“இவர் யார்?” என்று பிள்ளையவர்களைக் கேட்டார். தம்மிடம் நான் சில
காலமாகப் பாடம் கேட்டு வருவதை அவர் சொன்னார்.

அன்று அமாவாசையாதலால் விரைவில் பட்டீச்சுரம் போய்ப் பூஜை
முதலியன செய்ய எண்ணிய என் ஆசிரியர் உடனே புறப்படத் தொடங்கினார்.
அப்போது செட்டியார் பெரிய தாம்பாளமொன்றில் இரண்டு சீப்பு
வாழைப்பழத்தையும் சீனாக் கற்கண்டுப் பொட்டலத்தையும் எடுத்து வந்து
ஆசிரியர் முன்பு வைத்தார். ஆசிரியர் பழங்கள் சிலவற்றையும் சிறிதளவு
கற்கண்டையும் எடுத்துக் கொண்டார். உடனிருந்த நாங்களும்
எடுத்துக்கொண்டோம். எங்களோடு செட்டியாரும் வேறு சிலரும் கொஞ்ச தூரம்
வந்தனர்.

செட்டியார் என்னிடம் பேசியது

நாங்கள் செல்லும்போதே செட்டியார் என்னைப் பார்த்து, ”என்ன
என்ன நூல்கள் பாடம் கேட்டீர்?” என்று கேட்டார். விவரமாக நான்
சொன்னேன். “சரி; இப்போது என்ன கேட்டு வருகிறீர்?” என்றார். அதற்கும்
விடை கூறினேன்.

செட்டியார் என்னை விசாரிப்பதை அறிந்த பிள்ளையவர்களுக்கு மேலே
கால் ஓடவில்லை. நான் பாடல் சொல்வதையும் பொருள் சொல்வதையும் அவர்
கேட்கவேண்டுமென்று என் ஆசிரியர்