பக்கம் எண் :

சிலேடையும் யமகமும் 255

“வெள்ளைநிறத் தாற்செயற்கை மேவியே வேறுநிறம்
கொள்ளுகையாற் றோயக் குறியினால்-உள்ளவன்பில்
தாய்நோந்த வாறுமுகத் தாளாளா நீமொழிந்த
ஆய்நூலு நீருநிக ராம்”

[நூலுக்கு: வெள்ளை நிறத்தை உடைமையாலும், செய்கையினால்
வெவ்வேறு நிறத்தை அடைதலாலும், சாயத்தில் தோய்க்கின்ற அந்தச்
செயலாலும். நீருக்கு: இயல்பாக வெண்மை நிறம் உடைமையாலும்,
செயற்கையால் வேறு வேறு நிறங்களைக் கொள்ளுதலாலும். தோயமென்னும்
பெயரை உடைமையாலும். தோய் அக்குறி, தோயம் குறி என இரண்டு
வகையாகப் பிரித்துப் பொருள் கொள்ள வேண்டும்; தோயம் - நீர்; குறி -
பெயர். தாய் நேர்ந்த - தாயை ஒத்த.]

நான் செய்யுளை முடித்துச் சொன்னதைக் கேட்டு ஆறுமுகத்தா பிள்ளை
ஏதேனும் குற்றம் கூற ஆரம்பித்தால் என்ன செய்வதென்ற பயம் எனக்கு
இருந்தது. என் ஆசிரியர் என்னை அதிலிருந்து மீட்டார். ஆறுமுகத்தாபிள்ளை
தம் அபிப்பிராயத்தைச் சொல்வதற்கு முன்பே, “நன்றாயிருக்கிறது; ‘உள்ள
அன்பில் தாய் நேர்ந்த ஆறுமுகத் தாளாளா’ என்ற பகுதி பொருத்தமாக
உள்ளது. அந்தரங்கத்தில் தம்பிக்கு எல்லோரிடத்திலும் எவ்வளவு அன்பு
இருக்கிறது என்பதை அது விளக்குகிறது” என்று அவர் கூறினார். ஆறுமுகத்தா
பிள்ளையின் முகத்திலே புன்னகை சிறிது அரும்பியது.

“முன் இரண்டடியில் அல்லவோ செய்யுளின் அருமை இருக்கிறது?
பின்பகுதியில் என்ன நயம் இருக்கிறது?” என்று நான் எண்ணினேன். சிலேடை
பாடுவதும், செய்யுள் நயம் தெரிவதும் அப்போது முக்கியமாக இல்லை;
ஆறுமுகத்தா பிள்ளையின் திருப்தியைப் பெறுவதுதான் முக்கியமாக இருந்தது.
இந்த இரகசியத்தை ஆசிரியர் உணர்ந்து அதற்கு ஏற்றபடி நடந்து காட்டினார்.

நாங்கள் பட்டீச்சுரம் வந்து சேர்ந்தோம். பாடம் நடந்து வந்தது.
ஆறுமுகத்தா பிள்ளையின் அன்பும் அதிகாரமும் கலந்து கலந்து
வெளிப்பட்டன.

யமகப் பாட்டு

பின் ஒரு நாட் காலையில் பட்டீச்சுரம் கோயிலுக்குச் சென்றோம்.
ஆறுமுகத்தாபிள்ளையும் வந்திருந்தார். அக்கோயிலில் திருமாளிகைப்பத்தியின்
மேற்குக் கோடியில் எழுந்தருளியுள்ள விநாயகருக்கு மதவாரணப் பிள்ளையார்
என்பது திருநாமம். அம்மூர்த்