பக்கம் எண் :

256என் சரித்திரம்

தியைத் தரிசித்து நிற்கையில் ஆறுமுகத்தாபிள்ளை, “இந்த விநாயகர்
திருநாமத்தை யமகத்தில் அமைத்து ஒரு செய்யுள் சொல்லும்” என்றார். யமகம்
பாடுவது சுலபமானதன்று. யமகச் செய்யுட்களைப் படித்து அர்த்தம்
தெரிந்துகொள்வதே சிரமமாக உள்ளபோது அந்நிலையில் விரைவில்
மதவாரணப் பிள்ளையார் திருநாமத்தை வைத்து யமகச் செய்யுள் ஒன்று நான்
பாடுவதென்பது சாத்தியமான காரியமா? ஒன்றும் தோன்றாமல் ‘மிரள மிரள’
விழித்தேன். எனக்கு உண்டான வருத்தத்திற்கு ஓர் எல்லை இல்லை. வாய்
விட்டு அழவில்லையே ஒழிய என் முகம் அகத்திலுள்ள வருத்தம்
முழுவதையும் புலப்படுத்தியது. அதை என் ஆசிரியர் கவனித்தார். அவருடைய
பொறுமைக்கும் எல்லை உண்டு என்பது தெரிந்தது. ஆறுமுகத்தா பிள்ளையைப்
பார்த்தார். “என்ன தம்பீ, இந்த மாதிரி அடிக்கடி இவருக்குக் கடினமான
விஷயங்களைக் கொடுத்துப் பாடச் சொல்வது தர்மமா? இவர் செய்யுள் இயற்றக்
கூடிய பழக்கமுடையவரே. ஆனாலும் இப்படி வற்புறுத்தித் திடீர் திடீரென்று
சொல்லச் செய்தால் செய்யுள் வருமா? தானாகக் கனிந்து வரவேண்டியதைத்
தடியால் அடித்துக் கனியவைக்கலாமா?” என்று சொன்னபோது ஆறுமுகத்தா
பிள்ளை மேலே ஒன்றும் பேசவில்லை. தாம் செய்வது பிழை என்று அவர்
உணர்ந்தாரோ, இல்லையோ, மரியாதைக்குப் பயந்து பேசாமல் இருந்து
விட்டார்.

நாங்கள் வீடு சென்றவுடன் ஆசிரியர் தாமே மதவாரணப் பிள்ளையார்
விஷயமாக யமகச் செய்யுளொன்றை இயற்றி, என்னை எழுதச் சொல்லி
ஆறுமுகத்தா பிள்ளையிடம் படித்துக் காட்டச் சொன்னார். நான் அவ்வாறே
செய்தேன்.

விரத பங்கம்

புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமைகளில் சில வீடுகளில் அட்சதை
வாங்கிக் கொண்டு சமைத்து ஒரு வேளை மாத்திரம் உண்ணுதல் எங்கள்
குடும்ப வழக்கம். காலையில் ஸ்நானம் செய்து அயலார் வீடுகளுக்கு ஈர
வஸ்திரத்தோடு மௌனமாகச் சென்று ஈரச் சவுக்கத்தில் அட்சதை வாங்குவதை
ஒரு விரதமாக எங்கள் முன்னோர் கொண்டிருந்தனர்.

இதனை, ‘கோபாலம் எடுத்தல்’ என்று சொல்வார்கள். பட்டீச்சுரத்தில்
நானிருந்தபோது முதல் சனிக்கிழமையன்று கோபாலம் எடுக்கும் பொருட்டுக்
காலையில் ஸ்நானம் செய்யப் புறப்பட்டேன். ஆறுமுகத்தா பிள்ளை என்ன
விசேஷமென்று விசாரித்தார். நான்