பக்கம் எண் :

258என் சரித்திரம்

நின்றது. அவர் தைரியமாகப் பேசுபவர். “பட்டீச்சுரத்தில் இரவில்
நெடுநேரம் பசியோடு வருந்தும்படி செய்த பிரம தேவன் எங்களை மரமாகப்
படைக்கவில்லையே!” என்ற கருத்து அமைய ஒரு பாட்டுப் பாடி அதை
வெளிப்படையாகச் சொல்லி வந்தார். ஆறுமுகத்தா பிள்ளை அதைக் கேட்டார்.
சவேரிநாத பிள்ளை அவருக்கு ஏற்றபடி விஷயங்களைப் பக்குவமாக எடுத்துச்
சொல்லி அவர் மனத்தை மாற்றினார். அதுமுதல் இரவு பத்து மணிக்குள்
யாவரும் ஆகாரம் செய்துகொள்ளும் வழக்கம் உண்டாயிற்று.
பிள்ளையவர்களும் நானும் வேறு பலரும் சவேரிநாத பிள்ளையின்
தைரியத்தையும் சாதுர்யத்தையும் மெச்சினோம். “இவருக்கு ஏற்ற கோடரி
சவேரிநாத பிள்ளையே” என்று நான் எண்ணி மகிழ்ந்தேன்.

சவேரிநாத பிள்ளையின் சல்லாபத்திலும் ஆசிரியரது அன்பிலும்
பட்டீச்சுர வாசத்தில் இருந்த கசப்பு எனக்கு நீங்கியது.

அத்தியாயம்-43

ஸரஸ்வதி பூஜையும் தீபாவளியும்

நான் பிள்ளையவர்களிடம் வந்து சேர்ந்து சில மாதங்களே ஆயின.
சித்திரை மாதம் வந்தேன் (1871 ஏப்ரல்); புரட்டாசி மாதம் பட்டீச்சுரத்தில்
இருந்தோம். இந்த ஆறு மாதங்களில் நான் எவ்வளவோ விஷயங்களைத்
தெரிந்து கொண்டேன். தமிழ் இலக்கிய சம்பந்தமான விஷயங்களோடு
உலகத்திலுள்ள பல வேறு வகைப் பட்ட மனிதர்களின் இயல்புகளையும்
உணர்ந்தேன். செல்வத்தாலும் கல்வியாலும் தவத்தாலும் நிரம்பியவர்களைப்
பார்த்தேன். அவர்களுள் அடக்கம் மிக்கவர்களையும், கர்வத்தால் தலை
நிமிர்ந்தவர்களையும் கண்டேன். உள்ளன்புடையவர்களையும், புறத்தில்
மாத்திரம் அன்புடையவர்கள் போல நடிப்பவர்களையும் காண நேர்ந்தது.
வறுமை நிலையிலும் உபகாரம் செய்வதை மறவாத பெரியோர்கள் பழக்கமும்
ஏற்பட்டது. அடிக்கடி இன்ப நிகழ்ச்சிகளுக்கிடையே துன்பங்களும் விரவி
வந்தன. பட்டீச்சுரத்தில் திருமலைராயனாற்றிலிருந்து ஒரு வாய்க்கால் பிரிகிறது.
நான் அவ்விடத்தில் ஒருநாள் ஸ்நானம் செய்யும்பொழுது சுழலில் அகப்பட்டுக்
கொண்டேன். இரண்டு பேர்கள் என்னை எடுத்துக் கரையேற்றினார்கள்.

இவ்வாறு இருந்த எனக்கு உணவினர்களைக் காணவேண்டுமென்ற
ஆசை உண்டாயிற்று. என் தாய் தந்தையர் அப்போது