பக்கம் எண் :

ஸரஸ்வதி பூஜையும் தீபாவளியும் 259

சூரியமூலையில் இருந்தார்கள். பட்டீச்சுரத்திற்குச் சமீபத்தில்
உத்தமதானபுரம் இருக்கிறது. அதனால் ஒரு முறை அங்கே சென்று அங்கிருந்த
சிறிய தந்தையாரையும் சிறிய தாயாரையும் பார்த்து வரவேண்டுமென்ற ஆசை
இருந்தது. புரட்டாசி மாதமாதலால் நவராத்திரி ஆரம்பமாயிற்று. என்
ஆசிரியரிடம் விடை பெற்று ஸரஸ்வதி பூஜைக்கு உத்தமதானபுரம் சென்றேன்.
செல்லும்போது ஆசிரியர், “போய் நான்கு நாள் இருந்துவிட்டு வாரும்” என்று
கூறினார். பட்டீச்சுரத்தில் நிகழ்ந்த கஷ்டங்களைச் சில தினங்களேனும் நான்
மறந்திருக்கலாமென்பது அவர் எண்ணம் போலும்.

விஜயதசமி

ஸரஸ்வதி பூஜைக்கு உத்தமதானபுரத்தில் இருந்தேன்; ஊருக்குச்
செல்லும்போது அங்கே சில நாட்கள் தங்கலாமென்று தான் எண்ணினேன்.
ஸரஸ்வதி பூஜை செய்துவிட்டு மறுநாட்காலையில் புனப் பூஜையும் செய்தேன்.
விஜயதசமியாகிய அன்று மாணாக்கர்களுக்கு விசேஷமான தினம் அன்றோ?
தங்கள் தங்கள் ஆசிரியர்களிடம் புதிய பாடத்தை அன்று தொடங்குவது நம்
நாட்டு வழக்கம். பிள்ளையவர்கள் கையால் அன்று ஒரு நூல் பெற்றுக் கொள்ள
வேண்டுமென்ற விருப்பம் எனக்கு உண்டாயிற்று. “இவ்வளவு நாட்கள்
அவர்களோடு இருந்தோம். என்றைக்கு அவர்களோடு இருந்து பாடம் கேட்க
வேண்டுமோ அன்றைத் தினத்தில் அவர்களைப் பிரிந்து இருப்பது நியாயம்
அன்று. எப்படியாவது இன்று போய் அவர்களைப் பார்க்கவேண்டும்” என்று
உறுதி செய்து கொண்டேன்.

என் சிறிய தந்தையார் சில தினம் இருந்துவிட்டுப் போகும்படி என்னை
வற்புறுத்தினார். அவரும் சிறிய தாயாரும் என்னிடம் அளவற்ற அன்பு
பூண்டவர்கள். என்னைக் கடிந்து கோபிக்கும் இயல்பை அவர்களிடம் நான்
கண்டதே இல்லை. “சாமா, உன்னைப் பார்த்து ஆறு மாதங்கள் ஆயின. நான்
மாயூரம் வரலாம் வரலாமென்று இருந்தேன். இங்கே வேலை அதிகமாக
இருக்கிறது. அதனால் வரமுடியவில்லை. நீ வந்தாயே என்று எவ்வளவோ
சந்தோஷம் அடைந்தேன். உடனே போக வேண்டுமென்று சொல்லுகிறாயே!
நான்கு நாள் பாடம் கேளாவிட்டால் என்ன நஷ்டம் வந்துவிடப் போகிறது?”
என்று அவர் சொன்னார். அவ்வூரில் அவர் கிராம முன்சீபாக இருந்தார்.
அவருக்குப் பல வேலைத் தொல்லைகள் உண்டென்பதை நான் அறிவேன்.
என்சிறிய தாயாரும் இருந்து போகும்படி வற்புறுத்தினார்.