பக்கம் எண் :

ஸரஸ்வதி பூஜையும் தீபாவளியும் 261

உச்சிஷ்ட கணபதி தரிசனம்

சவேரிநாத பிள்ளையும் நானும் பாடம் கேட்டு வந்தோம்.
கும்பகோணத்திற்கு ஒரு முறை யாவரும் சென்று தியாகராச செட்டியாரைக்
கண்டு பேசி இருந்துவிட்டு வந்தோம். அவரும் சில முறை பட்டீச்சுரத்திற்கு
வந்து சென்றார். ஒரு நாள் சத்தி முற்றம் கோயிலுக்குச் சென்று தரிசனம்
செய்தோம். அங்கே அம்பிகை தவம்புரிந்து இறைவன் பிரசன்னமானபொழுது
தழுவிக் கொண்டதாக ஓர் ஐதிஹ்யம் உண்டு. அங்ஙனம் தழுவிய
திருக்கோலத்தில் ஒரு விக்கிரகம் அங்கே இருக்கின்றது. அதையும்
தரிசித்தோம். அங்கே ஆலய வாசலில் உச்சிஷ்ட கணபதியின் கோயில் ஒன்று
இருக்கிறது. அந்த மூர்த்தியை உபாஸனை செய்தால் நல்ல வாக்கு
உண்டாகுமென்று பெரியோர்கள் கூறக் கேட்டிருந்தேன். ஆதலால் மனத்தில்
அந்நினைவுடனே அப்பெருமானை வணங்கினேன்.

கோட்டூரில் தீபாவளி

புரட்டாசி மாதம் போய் ஐப்பசி மாதம் வந்தது. தீபாவளி அணுகிற்று.
என் தாய் தந்தையரையும் குழந்தையாக இருந்த தம்பியையும் பார்க்க
வேண்டுமென்ற ஆசை எழுந்தது. தீபாவளிக்குப் போய் என் பெற்றோர்களோடு
இருந்து வரலாமென்று எண்ணிப் பிள்ளையவர்களிடம் என் கருத்தை
வெளியிட்டேன்.

“அப்படியே செய்யலாம்” என்று அவர் அனுமதி அளித்தார்.
புறப்படும்பொழுது இரண்டு பட்டுக்கரை அங்கவஸ்திரங்களை வருவித்து
என்னிடம் அளித்து, “தீபாவளியில் உபயோகப்படுத்திக் கொள்ளும்.
சௌக்கியமாகத் தீபாவளி ஸ்நானம் செய்து சில நாள் தங்கிவிட்டு அப்படியே
மாயூரத்திற்கு வந்துவிடலாம். நான் தீபாவளிக்கு அங்கே போவதாக
எண்ணியிருக்கிறேன்” என்றார்.

அவருடைய அன்பை அறிந்து நான் வியந்தேன்; அந்த
அங்கவஸ்திரங்களைப் பணிவுடன் ஏற்று விடைபெற்றுப் புறப்பட்டேன்.

கோட்டூரென்பது பாடல் பெற்ற சிவஸ்தலமும் ஹரதத்த
சிவாசாரியரவர்களுடைய அவதார ஸ்தானமுமாகிய கஞ்சனூருக்குக் கிழக்கே,
கார் காத்த வேளாளர்களுக்கு ஆசிரியர்களாகிய சோழியப் பிராமணர்கள்
வசிக்கும் துகிலிக்கு மேற்கே சமீபத்தில் உள்ளது. அதன் பெயர்
கோடையென்று செய்யுட்களில் வழங்கும்.