பக்கம் எண் :

262என் சரித்திரம்

கஞ்சனூர், துகிலி, மணலூர் முதலிய இடங்களில் மாறி மாறித் தங்கிவந்த
என் தந்தையார் அப்போது கோட்டூரில் என் சிறிய தாயார் (தாயாரின் தங்கை)
வீட்டில் இருந்தார்; துலா மாதமாதலால் காவிரி ஸ்நானம் செய்ய எண்ணி என்
பெற்றோர்கள் அங்கே இருந்தனர். சூரியமூலையிலிருந்து என் பாட்டனாரும்
வந்திருந்தார். கோட்டூரில் காவிரி உத்தரவாகினியாக ஓடுகிறது. அதனால் பலர்
அங்கே ஸ்நானம் செய்வதற்கு வருவார்கள். நான் அங்கே போனது
பலபேரையும் ஒருங்கே பார்ப்பதற்கு அனுகூலமாக இருந்தது யாவரும்
என்னுடைய க்ஷேம சமாசாரத்தையும் கல்வியபிவிருத்தியையும் பற்றி
விசாரித்தார்கள். நான் கொண்டு போயிருந்த அங்கவஸ்திரங்களைப் பார்த்த
என் தந்தையார் மிக்க திருப்தியை அடைந்தார். என் தாயாருக்கோ அவரைக்
காட்டிலும் அதிக மகிழ்ச்சி உண்டாயிற்று. “என்னவோ. பகவான் தான்
காப்பாற்றவேணும். எங்களால் ஒன்றும் முடியாதென்று தெரிந்து இப்படி ஒரு
நல்லவரைக் கொண்டுவந்துவிட்டிருக்கிறது, அவர் கிருபைதான்” என்று அவர்
சொல்லி உளம் பூரித்தார்.

தீபாவளி ஸ்நானம் செய்தேன். என் ஆசிரியர் அன்புடன் அளித்த
அங்கவஸ்திரங்களைத் தரித்துக் கொண்டேன். அப்போது எனக்கு ஒரு தனி
மகிழ்ச்சி உண்டாயிற்று.

ஒரு கனவான்

கோட்டூரில் இருந்தபோது பல பேர்கள் என்னைப் பார்த்துப்
பிள்ளையவர்களைப் பற்றி விசாரித்தார்கள். அநேகமாக யாவரும் அவரைப்
பாராட்டினார்கள் உலகத்தில் எல்லோரும் ஒரே விதமான
அபிப்பிராயமுடையவர்களாக இருக்கிறார்களா? நல்லதை நல்லதென்று
சொல்பவர்களுக்கு நடுவில் அதைக் கெட்டதென்று சொல்பவர்களும் இருந்து
வருகிறார்கள். ஒரு நாள் என் தகப்பனாருக்குத் தெரிந்த ஒருவர் வந்திருந்தார்.
நெடுநேரம் பேசினார். “உங்கள் பிள்ளை என்ன செய்கிறான்?” என்று
விசாரித்தார். என் தந்தையார், “தமிழ் படிக்கிறான்” என்று சொன்னார். அவர்
ஏதோ ஆச்சரியத்தைக் கேட்டவரைப் போலவே திடுக்கிட்டு, “என்ன? தமிழா!”
என்று கூறினார். அதோடு அவர் நிற்கவில்லை. “தமிழையா படிக்கிறான்!
இங்கிலீஷ் படிக்கக் கூடாதா? ஸம்ஸ்கிருதம் படிக்கலாமே? இங்கிலீஷ் படித்தால்
இகத்துக்கு லாபம்; ஸம்ஸ்கிருதம் படித்தால் பரத்துக்கு லாபம். தமிழைப்
படித்தால் இரண்டுக்கும் லாபம் இல்லை” என்று அவர் மேலும் தம் கருத்தை
விளக்கினபோது எனக்குக் தூக்கி வாரிப் போட்டது.