பக்கம் எண் :

264என் சரித்திரம்

சுப்பிரமணிய தேசிகர் திருவாவடுதுறைக்கு வந்து அங்குள்ள பலருக்குப்
பாடம் சொல்லி வரவேண்டுமென்று கட்டளையிட்டதை அறிந்த நான் அவர்
திருவாவடுதுறையில் வந்திருப்பாரென்றே எண்ணினேன்; ஆயினும் ஒருவேளை
வாராமல் மாயூரத்திலேயே இருக்கக்கூடுமென்ற நினைவும் வந்தது. என்
சந்தேகத்தை அறிந்த என் தந்தையார் தாமே திருவாவடுதுறை சென்று என்
ஆசிரியர் இருக்கும் இடத்தை அறிந்து வருவதாகச் சொல்லிப் புறப்பட்டுச்
சென்றார்.

தந்தையார் விசாரித்து வந்தது

திருவாவடுதுறைக்குச் சென்ற தந்தையார் அங்கே சிவாலயத்தில் ஸ்ரீ
குமாரசாமித் தம்பிரானைப் பார்த்தார். தம்பிரானுக்கும் தந்தையாருக்கும்
பழக்கமாதலால் அவரிடம் என் தந்தையார் பிள்ளையவர்களைப் பற்றி
விசாரிக்கவே அவர்கள் மாயூரத்தில் இருப்பதாகவும் தைமாதம் நடைபெறும்
குருபூஜைக்கு அவசியம் திருவாவடுதுறைக்கு வரக்கூடுமென்றும் தம்பிரான்
கூறியதோடு என் தேக நிலையைப் பற்றியும் கேட்டார்.

விஷயத்தைத் தெரிந்து கொண்ட என் தந்தையார் சூரியமூலை வந்து
அதை எனக்கு அறிவித்து, “குரு பூஜைக்கு இன்னும் சில நாட்களே
இருக்கின்றன. இப்போது நீ மாயூரம் போனால் மறுபடியும்
பிள்ளையவர்களோடு திருவாவடுதுறைக்கு வரவேண்டியிருக்கும்.
திருவாவடுதுறைக்கே குரு பூஜையின் பொருட்டு அவர்கள் வருவதால் நீயும்
அப்போது அங்கே போய் அவர்களுடன் சேர்ந்து கொள்ளலாம்” என்றார்.
நான் அவ்வாறே குரு பூஜையை எதிர் நோக்கியிருந்தேன்.

கண்ட காட்சிகள்

தை மாதத்தில் அசுவதி நட்சத்திரத்தில் திருவாவடுதுறை ஆதீன
ஸ்தாபகராகிய ஸ்ரீ நமசிவாய மூர்த்தியின் குரு பூஜை நடைபெறும். குரு பூஜை
நாளன்று காலையில் நான் என் சிறிய தாயார் குமாரர்
கோபாலையரென்பவருடன் திருவாவடுதுறை வந்து சேர்ந்தேன். நான் முன்பு
பார்த்த திருவாவடுதுறையாக அவ்வூர் அப்போது காணப்படவில்லை. குரு
பூஜை, குரு பூஜையென்று அயலிலுள்ள கிராமத்தினர்கள் மிகவும் சிறப்பாகப்
பேசிக் கொள்வதைக் கேட்ட எனக்கு அத்திருநாள் ஒரு பெரிய உத்ஸவமாக
நடை பெறுமென்ற கருத்து மாத்திரம் இருந்தது. ஆனால் அன்று நான் கண்ட
காட்சிகள் என் கருத்துக்கு எவ்வளவோ அதிகமாக விளங்கின.