பக்கம் எண் :

திருவாவடுதுறைக் காட்சிகள் 265

எங்கே பார்த்தாலும் பெருங்கூட்டம். தமிழ் நாட்டிலுள்ள ஜனங்களில்
ஒவ்வொரு வகையாரையும் அங்கே கண்டேன். நால்வகை வருணத்தினரும்,
பாண்டி நாட்டார், சோழ தேசத்தினர் முதலிய வெவ்வேறு நாட்டினரும்
வந்திருந்தனர். வித்துவான்களில் எத்தனை வகையினர்! சங்கீத
வித்துவான்களில் நூற்றுக் கணக்கானவர்களைக் கண்டேன். அவர்களில் கதை
பண்ணுபவர்களும், வாய்ப் பாட்டுப் பாடுபவர்களும், வீணை, புல்லாங்குழல்,
கோட்டு வாத்தியம், பிடில் முதலிய வாத்தியங்களில் கை தேர்ந்தவர்களும்
இருந்தனர். ஸம்ஸ்கிருத வித்வான்களில் தனித்தனியே ஒவ்வொரு
சாஸ்திரத்தையும் கரை கண்டவர்கள் அங்கங்கே தங்கியிருந்தனர்
வேதாத்தியயனம் செய்தவர்கள் கோஷ்டி கோஷ்டியாக வேத பாராயணம்
செய்தபடி ஆலயத்திலும் பிற இடங்களிலும் இருந்தனர். தேவாரங்களை
இன்னிசைப் பண்ணுடன் ஓதும் இசை வாணர்கள் விபூதி ருத்திராக்ஷ
தாரணத்தோடு முகத்திலே ஒரு வகையான தேஜசு விளங்க மனத்தைக் கவரும்
தேவாரம் முதலியவற்றை ஓதிக் கொண்டிருந்தனர்.

பல இடங்களிலிருந்து தம்பிரான்கள் வந்திருந்தனர். மடத்து முக்கிய
சிஷ்யர்களாகிய தக்க கனவான்கள் பலர் காணிக்கைகளுடன் வந்திருந்தனர்.
மற்றச் சந்தர்ப்பங்களில் தங்கள் ஞானாசிரியரைத் தரிசிக்க இயலாவிட்டாலும்
வருஷத்துக்கு ஒரு முறை குருபூஜா தினத்தன்று தரிசித்துப் பிரசாதம் பெற்றுச்
செல்வதில் அவர்களுக்கு ஒரு திருப்தி இருந்தது. ஸ்ரீ சுப்பிரமணிய
தேசிகருடைய அன்பு நிரம்பிய சொற்கள் அவர்கள் உள்ளத்தைப் பிணித்து
இழுத்தன. தமிழ்நாட்டில் தென்கோடியில் இருந்தவர்களும் இக்குருபூஜையில்
வந்து தரிசிப்பதை ஒரு விரதமாக எண்ணினர். அவரவர்கள் வந்த வண்டிகள்
அங்கங்கே நிறுத்தப் பட்டிருந்தன. குடும்ப சகிதமாகவே பலர் வந்திருந்தார்கள்.

அன்ன தானம்

குரு பூஜா காலங்களில் அன்னதானம் மிகவும் சிறப்பாக நடைபெறும்.
யார்வரினும் அன்னம் அளிக்கப்படுமென்பதற்கு அறிகுறியாக மடத்தில்
உத்ஸவத்தின் முதல் நாள் அன்னக்கொடி ஏற்றுவார்கள். பல வகையான
பரதேசிகளும் ஏழை ஜனங்களும் அங்கே வந்து நெடு நாட்களாகக் காய்ந்து
கொண்டிருந்த தங்கள் வயிறார உண்டு உள்ளமும் உடலும் குளிர்ந்து
வாழ்த்துவார்கள். பிராமண போஜனமும் குறைவற நடைபெறும்.

தெருத் தெருவாக வீடு வீடாகக் குரு பூஜையின் விமரிசை விளங்கியது.
அவ்வூரிலுள்ளவர்கள் தங்கள் தங்கள் வீட்டில் விசேஷம்