பக்கம் எண் :

28என் சரித்திரம்

முதற்பெயர். ஸாமி என்று என் தந்தையாரை அழைத்த காரணம் பற்றி
அவரை யாவரும் ‘சின்னசாமி’ என்று வழங்கலாயினர். அவருக்கு அதுவே
பெயராக நிலைத்து விட்டது. என் தந்தையாருக்கு ஒரு தமக்கையார் இருந்தார்.

என் தந்தையாருக்கும் சிறிய தந்தையாருக்கும் இளமையில் என்
பாட்டனாரே வடமொழியையும் தமிழையும் கற்பித்தார். என் பாட்டியார்
சங்கீதப் பழக்கம் உடையவராதலின் அவருடைய அம்சம் என்
தந்தையாரிடமும் இருந்தது. அவருக்குச் சங்கீதத்தில் இளமை தொடங்கியே
விருப்பம் உண்டாகி வளர்ச்சி யடைந்து வந்தது.

என் தந்தையாருக்கு உபநயனம் ஆயிற்று. பாட்டியாருக்கு அவரைச்
சங்கீதத் துறையில் ஈடுபடுத்த வேண்டுமென்ற அவா இருந்து வந்தது.
தம்முடைய அம்மானாகிய கனம் கிருஷ்ணையர் உடையார்பாளையம்
ஸமஸ்தானத்தில் சங்கீத வித்துவானாக இருந்து சிறப்படைந்திருந்தமையின்
அவரிடமே தம் மூத்த குமாரரை ஒப்பித்துக் குருகுலவாசம் செய்யும்படி
விடலாமென்று எண்ணினார். என் பாட்டனாரும் இதற்குச் சம்மதித்தார். என்
தகப்பனாருக்கோ சங்கீத அப்பியாசத்தில் இருந்த ஆவல் சொல்லும்
அளவினதன்று. தமக்கு வாய்க்கப்போகிற குரு தாய்வழியினர் என்று தெரிந்த
போது அவரோடு சுலபமாகப் பழகலாமென எண்ணி மிக்க சந்தோஷத்தை
அடைந்தார்.

“ஸாமி, எங்கள் மாமாவைப் பற்றி நீ நன்றாகத் தெரிந்து கொண்டிருக்க
மாட்டாய். அவரால் திருக்குன்றத்துக்கும் நம்மைச் சார்ந்தவர்களுக்கும்
எவ்வளவு பெருமை உண்டாயிருக்கிறது தெரியுமா? அவருக்கு இதுவரையில்
நல்ல சிஷ்யன் ஒருவனும் கிடைக்கவில்லை. நீ அவரிடம் ஜாக்கிரதையாகப்
பழகி அவர் மனம் குளிரும்படி நடந்து வந்தால் அவருடைய வித்தை
முழுவதும் உனக்கு வராவிட்டாலும் முக்காற் பங்காவது வரும். சங்கீதத்தில்
அவருடைய மார்க்கமே தனி. அதை நீ கற்றுக் கொண்டால் பிற்காலத்தில் நீயும்
கியாதியை அடைவாய்” என்று என் பாட்டியார் கூறினார். அவ்வாறு
கூறுகையில் அவர் தம்முடைய குமாரரும் பிற்காலத்தில் ஒரு ஸமஸ்தானத்தில்
பலரும் பாராட்டும் வண்ணம் சங்கீத வித்துவானாக இருந்து விளங்குவதாகப்
பாவித்திருக்க வேண்டும். ஒவ்வொரு தாயும் தன் மகனைப் பற்றி இவ்வாறு
காணும் கனவுகளுக்குக் கணக்கு உண்டோ?

ஒரு நல்ல நாளில் என் பாட்டியார் தம் அருமைப் புதல்வரை
அழைத்துக்கொண்டு உடையார்பாளையம் சென்றார். தன் அம்மா