போக்கவும் ‘இவனுக்கு ஒரு குறைவும் இல்லை’ என்ற தைரியத்தை உண்டாக்கவும் காரணமாயின. பாடம் முடிந்தவுடன் எல்லோரும் எழுந்து வந்தோம். நான் முன்னே வந்தேன். ஆசிரியர் பின்னே சிறிது தூரத்தில் தம்பிரான்களோடு வரலாயினர். நான் வரும் வழியில் தந்தையாரைக் கண்டபோது, “அப்பா! நீ படித்ததைக் கேட்டேன். பண்டார சந்நிதிகள் சொன்ன வார்த்தைகளையும் கவனித்தேன். எல்லாம் ஈசுவரானுக்கிரகந்தான்” என்று சொன்னபோது உள்ளே இருந்த உணர்ச்சி பொங்கி வந்தது. மேலே பேசத் தெரியவில்லை. அவர் ஜாகைக்குச் சென்றார். பின் வருவதாகச் சொல்லி நான் மீண்டும் ஆசிரியரோடு சேர்ந்து கொண்டேன். இரு முதுகுரவரும் ஆசிரியரும் ஒவ்வொரு நாளும் மாலையில் ஆசிரியரோடு திருவாவடுதுறையிலுள்ள கோட்டுமாங்குளம் வரைக்கும் சென்று அனுஷ்டானங்களை முடித்துவிட்டு வருவது என் வழக்கம். இருட்டு வேளைகளில் ஆசிரியர் கையைப் பிடித்து அழைத்து வருவேன். அன்றைத் தினமும் அவ்வாறு சென்று திரும்பும்போது, “உம்முடைய தாயார் தகப்பனார் வந்திருப்பதாகச் சொன்னீரே; அவர்கள் எங்கே தங்கியிருக்கிறார்கள்? இப்போது பார்த்து விட்டுப் போகிறேன்” என்றார். “சிரமம் வேண்டாம். அவர்களே ஐயாவைப் பார்க்க வருவார்கள்” என்று நான் சொல்லியும் அவர் வற்புறுத்தவே, அவரை என் பெற்றோர்களிடம் அழைத்துச் சென்றேன். சத்திரத்தில் ஒரு விசிப் பலகையில் ஆசிரியர் அமர்ந்தார். தந்தையாரும் அமர்ந்தார். தந்தையாரிடம் ஆசிரியர் யோக க்ஷேமங்களை விசாரித்துக் கொண்டு இருந்த போது என் தாயார் வந்தார். அதற்கு முன் ஆசிரியரை அவர் பார்த்ததே இல்லை. “குழந்தையை நீங்களே தாயார் தகப்பனாரைப்போலக் காப்பாற்றி வருகிறீர்கள். நாங்கள் எந்த விதத்திலும் இவனுக்குப் பிரயோசனப் படாமல் இருக்கிறோம். உங்களுடைய ஆதரவினால் தான் இவன் முன்னுக்கு வரவேண்டும்” என்று கண்ணில் நீர் ததும்ப அவர் சொன்னார். ஒரு தெய்வத்தினிடத்தில் வரம் கேட்பது போல இருந்தது அந்தத் தொனி. “நீங்கள் கொஞ்சமும் கவலைப்பட வேண்டாம். உங்கள் குமாரர் நல்ல புத்திசாலி, நன்றாகப் படித்து வருகிறார். கடவுள் |