கிருபையால் நல்ல நிலைமைக்கு வருவார்” என்று ஆசிரியர் கூறிய வார்த்தைகள் என் தாயாரின் உள்ளத்தைக் குளிர்வித்தன. என்னிடம் அன்பு வைப்பவர்களுக்குள்ளே அந்த மூன்று பேர்களுக்கு இணையானவர்கள் வேறு இல்லை. அம் மூவரும் ஒருங்கே இருந்து என் நன்மையைக் குறித்துப் பேசும்போது அவர்களுடைய அன்பு வெளிப்பட்டது. அந்த மூவருடைய அன்பிலும் மூன்று விதமான இயல்புகள் இருந்தன. அவற்றினிடையே உயர்வு தாழ்வு உண்டென்று சொல்ல முடியுமா? இன்ன வகையில் இன்னது சிறந்தது என்று தான் வரையறுக்க முடியுமா? ஒரே அன்பு மயமாகத் தோற்றிய அக்காட்சியை இப்போது நினைத்தாலும் என் உள்ளத்துள் இன்பம் ஊறுகின்றது. அம்மூவரையும் மூன்று அன்பு மூர்த்திகளாக இன்றும் பாராட்டி வருகிறேன். மறு நாள் விடியற் காலையில் என் பெற்றோர்கள், “உன்னைப் பார்த்து விட்டுப் போகத்தான் வந்தோம். பார்த்ததில் மிகவும் திருப்தியாயிற்று. ஊருக்குப் போய் வருகிறோம். உடம்பை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்” என்று என்னிடம் சொல்லிவிட்டுச் சூரிய மூலைக்கு என் தம்பியுடன் போனார்கள். அத்தியாயம்- 48 சில சங்கடங்கள் ஒரே மாதிரியான சந்தோஷத்தை எக்காலத்தும் அனுபவிப்பதென்பது இவ்வுலகத்தில் யாருக்கும் சாத்தியமானதன்று. மனிதனுடைய வாழ்விலே இன்பமும் துன்பமும் கலந்து கலந்தே வருகின்றன. செல்வத்திலே செழித்திருப்பவர்களாயினும், வறுமையிலே வாடுபவர்களாயினும் இன்பம் துன்பம் இரண்டும் இடையிடையே கலந்து அனுபவிப்பதை அல்லாமல் இன்பத்தையே அனுபவிக்கும் பாக்கியவான்களும் துன்பத்திலே வருந்தும் அபாக்கியர்களும் இல்லை. எனக்கு வேண்டிய நல்ல வசதிகளும் தமிழ்க் கல்வி லாபமும் திருவாவடுதுறையிலே கிடைத்தன. மனத்திலே சந்தோஷம் இடையறாது உண்டாவதற்கு வேண்டிய அனுகூலங்களெல்லாம் அங்கே குறைவின்றி இருந்தன. ஆனாலும், இடையிடையே அச்சந்தோஷத்திற்குத் தடை நேராமல் இல்லை. ஒவ்வாத உணவு இரண்டு வகையாக நடந்து வந்த பாட வகுப்பில் நானே படித்து வந்தமையால் சில நாள் என் தொண்டையும் நாக்கும் |