பக்கம் எண் :

318என் சரித்திரம்

கொண்டார், அப்பொழுது அவர் மனம் திருப்பெருந்துறை விநாயகர்
ஸந்நிதியிலேபோய் நின்றிருக்க வேண்டும். “செய்கிறேன்” என்றோ,
“திருவாவடுதுறைக்குப் புறப்படுவோம்” என்றோ அவர் சொல்ல வில்லை.

“நிலவுவந்த முடியினொடு வெயிலுவந்த
மழகளிற்றை நினைந்து வாழ்வாம்”

என்ற ஒரு செய்யுளின் அடி அவர் வாக்கிலிருந்து புறப்பட்டது.
அப்போது, ‘இப்பொழுதே இவர்கள் புராணத்திற்குப் பிள்ளையார் சுழி போட்டு
விட்டார்கள்’ என்று எண்ணினேன். வெயிலுவந்த விநாயகரென்பது
திருப்பெருந்துறையில் எழுந்தருளியுள்ள ஸ்தல விநாயகர் திருநாமம். வெயில்
உவந்த விநாயகர் என்ற திருநாமத்தோடு வெயிலுக்குப் பகையாகிய நிலவின்
ஞாபகமும்! அதனை அவர் திருமுடியில் அணிந்திருப்பதன் ஞாபகமும்
ஒருங்கே வந்தன போலும். நான் அந்த அடியை ஏட்டிலே எழுதிக்
கொள்ளவில்லை; என் உள்ளத்திலே எழுதிக் கொண்டேன்.

“சந்நிதானத்தின் திருவுள்ளப்படி நடப்பதுதான் எனக்கு இன்பம். நீர்
திருப்பெருந்துறை பார்த்ததில்லையே?”

“இல்லை; மாணிக்கவாசகர் திருவருள் பெற்ற ஸ்தலமென்று ஐயா
அவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.”

“ஆமாம்; அது நல்ல ஸ்தலந்தான். ஆவுடையார் கோவிலென்று
இப்போது எல்லோரும் சொல்லுவார்கள். இறைவன் திருவருளால் புராணம்
அரங்கேற்ற நேர்ந்தால் எல்லாவற்றையும் நீர் பார்க்கலாம்.”

திருப்பெருந்துறையைப் பார்க்க வேண்டுமென்ற விருப்பம் எனக்குத்
தோன்றியது; என் ஆசிரியர் அந்த ஸ்தல புராணத்தைப் பாட நான் அதனை
எழுத வேண்டுமென்ற ஆசை அதற்குமுன் எழுந்தது.

மூன்று நாட்கள் நான் மாயூரத்தில் தங்கியிருந்தேன். பிறகு ஆசிரியர்
புறப்படவே நானும் புறப்பட்டுத் திருவாவடுதுறையை அடைந்தேன்.

திருவாவடுதுறைக்கு வந்தபின் மீண்டும் பாடங்கள் வழக்கம் போல்
நடைபெற்றன. பெரிய வகையில் கந்தபுராணம் நடந்தது. சிறிய வகையில்
திருவிளையாடல், திருநாகைக்காரோணப் புராணம், மாயூரப் புராணம் முதலியன
நடந்தன.