குமாரசாமித் தம்பிரான் குமாரசாமித் தம்பிரானுக்கு வரவர மடத்து நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் நேர்ந்தது. அவர் பெரிய ஒடுக்கத்தில் இருந்தார். ஒடுக்கமென்பது பண்டார ஸந்நிதிகள் இருக்கும் இடத்திற்குப் பெயர். அவருடன் இருந்து காரிய தரிசியைப் போல முக்கியமான காரியங்களைக் கவனித்து வரும் தம்பிரானுக்கு ஒடுக்கத்தம்பிரான் என்று பெயர். நம்பிக்கையுள்ள தம்பிரான்களையே அப்பதவியில் நியமிப்பது வழக்கம். அந்த வேலையில் சின்ன ஒடுக்கமென்றும் பெரிய ஒடுக்கமென்றும் இரண்டு பிரிவுகள் உண்டு. பழம், சந்தனக்கட்டை, கற்கண்டு, பூஜா திரவியங்கள் முதலியவை சின்ன ஒடுக்கத்தைச் சார்ந்தவை. ஆபரணங்கள், விலையுயர்ந்த பட்டு, பீதாம்பரங்கள், ஆடைகள் முதலியன பெரிய ஒடுக்கத்தில் உள்ளவை. அப்பெரிய ஒடுக்கத்தில் உள்ளவர் அனுபவத்தில் முதிர்ந்தவராக இருப்பார். அத்தகைய வேலையையே குமாரசாமித் தம்பிரான் ஏற்று நடத்தி வரலாயினர். அதனோடு மடத்து வித்துவான் வேலையும் அவருக்கு இருந்தது. வித்துவானென்ற பட்டமும் அதற்கு உரிய சின்னமாகிய பல்லக்கும் அவருக்கு வழங்கப்பட்டன. பாடத்தில் மாறுதல் இதனால் முன்போல் நாள்தோறும் பாடம் கேட்டு வருவது அவருக்கு இயலாமற் போயிற்று. பெரிய வகுப்பென்பது பெயரளவில் வகுப்பேயன்றி உண்மையில் குமாரசாமித் தம்பிரானுக்காகவே அது நிகழ்ந்து வந்தது. அவர் நிலை மாறியவுடனே இரு பிரிவாக இருந்த பாடங்களும் மாறி, எல்லாத் தம்பிரான்களும் ஒருங்கே இருந்து கேட்க, காலையும் மாலையும் பாடங்கள் நடை பெற்றன. குமாரசாமித் தம்பிரான் இடையிடையே ஓய்வு நேரும்போது வந்து கேட்பார். புராண ஆரம்பம் சில தினங்களுக்குப் பிறகு பிள்ளையவர்கள் திருப்பெருந்துறைப் புராணம் இயற்றத் தொடங்கினார். முதலில் விநாயக வணக்கம் ஒன்றைச் சொல்லி முடித்தார். மாயூரத்தில் நான் அவரைப் போய்க் கண்டபோது ஒரடி கூறியது அவருக்கு ஞாபகம் இல்லை. அதனால் வேறு ஒரு செய்யுளைச் சொன்னார். அது முடிந்தவுடன் நான், “மாயூரத்திற்கு இது விஷயமாக நான் வந்தபோது வெயிலுவந்த விநாயகரைப்பற்றி ஒர் அடி சொன்னது என் ஞாபகத்தில் இருக்கிறது” என்று சொல்லி அவ்வடியையும் கூறினேன். |