பக்கம் எண் :

நான் இயற்றிய பாடல்கள் 345

“வருணன் பல மணிமாலைகளைக் கொணர்ந்து இராமபிரான்
திருவடிகளில் வைத்து, சிறியோர் பிழை செய்தால் பொறுப்பது பெரியோர்
செயல்; சரணம் என்று திருவடிகளில் வீழ்ந்தான்” என்பது அதன் கருத்து.

அதற்கு, “பரவிய இருளைப் போக்கும் தெய்வத் தன்மை பொருந்திய
சூரியனை இகழ்ச்சி செய்யும் ஒளியையுடைய மாலையை ஆயிரம் கையையுடைய
வருணன் பூமியின் மேல் பாத காணிக்கையாக வைத்து.........” என்று நான்
பொருள் சொல்லி வரும்போது, சேஷூவையர் இடைமறித்து, “இரு, இரு;
ஆயிரங் கையையுடைய வருணன் என்கிறாயே; பாட்டில் எங்கே இருக்கிறது?”
என்று கேட்டார்.

“ஆயிரம் கரத்தான் என்று இருக்கிறதே” என்றேன் நான்.

அவர் சிரித்தார். பிறகு, “வருணனுக்கு ஆயிரம் கைகள் உண்டு
என்பதற்கு எங்காவது ஆதாரம் உண்டா?” என்று கேட்டார்.

“இதில் தான் இருக்கிறது” என்றேன் நான்.

“உன் ஆசிரியர் இதற்கு இப்படியா பொருள் சொன்னார்?”

“நான் சொன்னதில் என்ன பிழை? அதை முதலில் சொல்லுங்கள்.”

“ஆயிரம் என்பதைக் கரத்தான் என்பதனோடு சேர்த்துப் பொருள்
செய்யக்கூடாது. பருதியைப் பழிக்கும் மாலை ஆயிரம் என்று பிரித்து ஆயிரம்
மாலைகளைக் கரத்தால் மண்மேல் அடியுறையாக வைத்து என்று கூட்டி
அர்த்தம் சொல்ல வேண்டும். நீ அவசரப்பட்டு விட்டாய்” என்றார்
அப்பெரியார். என் கர்வம் பங்கமுற்றது. “யார் யாரிடத்தில் என்ன என்ன
அறிவாற்றல் இருக்குமோ என்று எண்ணாமல் இவர்பால் மதிப்பின்றி நாம் நம்
பேதைமையை வெளிப்படுத்தி விட்டோமே” என்று வருந்தியதோடு, அவரைப்
பார்த்து, “நானாக அர்த்தம் பண்ணிச் சொன்னேன். என் ஆசிரியரிடம்
இன்னும் இந்த நூலை நான் பாடம் கேட்கவில்லை. நீங்கள் சொன்ன
அர்த்தந்தான் சரியென்று தோற்றுகிறது” என்று பணிவாகக் கூறினேன்.

“எதையும் யோசித்துச் சொல்ல வேண்டும். நீ தைரியமாகப் பொருள்
சொல்ல முன்வந்தது பற்றிச் சந்தோஷமடைகிறேன்” என்று சொல்லி அவர்
என்னை ஆசீர்வாதம் செய்து அனுப்பினார்.