பக்கம் எண் :

346என் சரித்திரம்

சில வாரங்களுக்குப் பின் என் ஆசிரியர் தஞ்சாவூரிலிருந்து பட்டீச்சுரம்
வந்தார். வந்த பின் என்னைப் பார்த்து வரும்படி ஹரிஹர புத்திர பிள்ளையை
அனுப்பினார். அவர் வந்து என் க்ஷேம சமாசாரத்தை விசாரித்து விட்டுச்
சென்றார். நான் சில நாட்களில் பட்டீச்சுரம் போய்ச் சேர்ந்தேன்.

கோளால் நேர்ந்த கலகம்

அப்பொழுது என் ஆசிரியர் எதிர்பாராத ஒரு விஷயத்தைச்
சொன்னார். நான் கேட்டுத் திடுக்கிட்டுப் போனேன். “நான் தஞ்சாவூரிலிருந்து
வந்தவுடன் திருவாவடுதுறைக்குப் போயிருந்தேன். சந்நிதானத்தினிடம் உம்மைப்
பற்றி யாரோ கோள் சொல்லியிருக்கிறார் போலிருக்கிறது. நீர் என்னிடம்
சந்நிதானத்தைப் பற்றிக் குறை கூறி மனவருத்தம் உண்டாக்கியதாகவும்,
அதனால் நான் இங்கே வந்து இருப்பதாகவும் யாரோ சொல்ல அதைச்
சந்நிதானம் உண்மை என்று நம்பி உம்மிடம் சிறிது சினங் கொண்டிருந்தது.
‘சாமிநாதையர் அப்படிச் சொல்லவில்லையே! அவர் அவ்வாறு செய்யக்
கூடியவரும் அல்லவே?’ என்று சொல்லி நான் சமாதானம் சொன்னேன். பெரிய
இடங்களில் கோள் சொல்பவர்கள் எவ்வளவோ பேர் வந்து சேருவார்கள்.
சம்பந்தமில்லாதவர் விஷயத்திலெல்லாம் கோள்கள் கிளம்பும். அவற்றை
உண்மையென்று நம்புவோர் சிலர். சந்நிதானம் உம்மிடம் இயல்பாகவே அன்பு
கொண்டிருப்பதால் நான் சொன்ன சமாதானத்தை ஏற்றுக் கொண்டது. நீரும்
அவர்கள் திருவுள்ளம் திருப்தியடையும் படி நடந்து கொண்டால் அனுகூலமாக
இருக்கும்” என்று அவர் கூறினார். “இது விபரீதமாக அல்லவா இருக்கிறது?
என்ன செய்யலாம்?” என்று எண்ணி நான் வருந்தினேன். என் ஆசிரியரும்
யோசித்துச் சுப்பிரமணிய தேசிகர் விஷயமாக ஒரு விருத்தமும், இங்கிலீஷ்
நோட்டு மெட்டில் ஒரு கீர்த்தனமும் இயற்றி, “நாம் மறுபடி
திருவாவடுதுறைக்குப் போகும்போது இந்த இரண்டையும் சந்நிதானத்தினிடம்
இசையுடன் சொன்னால் ஏதேனும் சிறிதளவு கோபம் மிஞ்சியிருந்தாலும்
மறைந்து விடும். இவற்றை நன்றாகப் பாடம் பண்ணி வைத்துக் கொள்ளும்”
என்று என்னிடம் சொன்னார். நான் அவ்வாறே அவற்றைப் பாடம் பண்ணி
இசையுடன் பாடப் பழகிக் கொண்டேன்.

கீர்த்தனம்

சில தினங்களுக்குப் பின் நாங்கள் திருவாவடுதுறை சென்றோம்.
சுப்பிரமணிய தேசிகரைக் கண்டவுடன் ஆசிரியர் கட்டளைப்படி நான்